தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வெளிநடப்பு

வெளிநடப்பு

வெளிநடப்பு


ADDED : மே 29, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பயிர்கடன் முழுதும் ரத்து செய்யாதது கண்டித்து விவசாயிகள்... நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் தடுக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது; உரம் விலை ஏற்றத்தால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பசுந்தாள் உரத்தை அதிகளவு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தனியாருக்கு விற்பனை செய்ய கூடாது, தற்போது சாகுபடி பருவம் என்பதால் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் போதுமான உரங்களை இருப்பு வைக்க வேண்டும். 20 ஆண்டுகால கோரிக்கையான கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், கடந்த சில தினங்களுக்கு முன் சங்கராபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் நெல், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனை முறையான கணக்கெடுப்பு நடத்தி சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கிய முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தல், ஏரிகளில் ஒரே இடத்தில் வண்டல் மண் எடுக்காமல் பரவலாக மண் எடுக்க வேண்டும், மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தல், சாலையோரமாக காயவைக்கப்படும் பயிர்களால் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு மாறாக கிராமங்களில் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு உலர்களம் அமைக்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படும் விதைகள் சரியாக முளைப்பதில்லை. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை. பூட்டை அருகே செம்பராம்பட்டு கிராமத்தில் மெயின்ரோட்டில் இருந்து உண்டு, உறைவிட பள்ளிக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.

நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சமாக பெறப்படுகிறது. சிறுவங்கூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ‘சேம்பிள்’ எனக்கூறி ஒவ்வொரு விவசாயிடமும் இருந்து 40 கிலோ வரை நெல்லினை சேகரிக்கின்றனர். சேகரித்த நெல்களை மூட்டை பிடித்து ஏதேனும் ஒரு விவசாயி பெயரில் கணக்கெடுத்து பணத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள மாடூர் ஏரியில் ஆய்வு மேற்கொள்ளுதல், மரபணு மாற்றப்பட்ட காய்கறி விதைகள் விற்பனையை தடுக்க வேண்டும். எலவனாசூர்கோட்டையில் காலியாக உள்ள மின்வாரிய உதவி மின்பொறியாளரை பணியமர்த்த வேண்டும். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் குரங்குகள் உள்ளே நுழையாதவாறு மாற்றியமைத்தல், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துதல், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளது. பருவம் தவறிய மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும்.

மரவள்ளி பயிருக்கான காப்பீடு தொகை அதிகமாக உள்ளது. தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் செல்லும் வனப்பகுதி சாலையை சீரமைத்தல், விவசாயிகள் உற்பத்தி குழு அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொடர்பாக விவசாயிகள் பேசினர்.

டி.ஆர்.ஓ., ஜீவா, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குர் லதா, வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

வெளிநடப்பு;: குறைதீர் கூட்டம் துவங்கியதும் விவசாய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசை கண்டிப்பதாகவும், பயிர் கடன் முழுதும் ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, வெளிநடப்பு செய்வதாக கூறி குறைதீர் கூட்டத்திலிருந்து வெளியே சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக பேசினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us