மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது! பணி தாமதத்தை கண்டறிந்து நடவடிக்கை தேவை
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது! பணி தாமதத்தை கண்டறிந்து நடவடிக்கை தேவை
UPDATED : ஜூன் 08, 2026 03:10 PM
ADDED : ஜூன் 08, 2026 03:00 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணியில் ஊழல் நடந்திருப்பதால் பணி நிறைவடையாமல் உள்ளது என புகார் எழுந்துள்ளது. புதிய அரசு கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பணியை விரைந்து முடித்து மருத்துவமனையை திறக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கடந்த தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், 54 கோடி ரூபாய் மதிப்பில், 6 தளங்களுடன், 2 பிளாக்குகளாக மருத்துவமனை கட்ட கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. 18 மாதங்களில் பணி முடித்தாக வேண்டும்.
அதன்படி 2024ம் ஆண்டே பணி நிறைவடைந்திருக்க வேண்டும். ஒப்பந்த காலம் நிறைவடைந்து ஆண்டு கணக்கில் ஆகிவிட்டது ஆனால் இன்னும் பணிகள் முடிந்தபாடில்லை.
ஒரு சில பணியை நிறைவு செய்வதற்கு முன்பாக பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கிவிட்ட நிலையில், கிடப்பில் உள்ள பணியை நிறைவு செய்யாமல் ஒப்பந்ததாரர் காலம் கடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தற்போது, மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் முறையான சிகிச்சை கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். குவியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு பக்கம் திண்டாடும் நிலையில், மருத்துவர்கள் அமர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமின்றி சங்கடத்தில் உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்ய கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், திருவண்ணாமலை என எடுத்துச் சென்று அலையும் அவலத்திற்கும் தீர்வு கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
கடந்த ஆட்சியின் நிறைவு காலத்தில் மருத்துவமனையை எப்படியாவது திறந்து விட வேண்டும் என்ற வேகத்தில் ஆட்சியாளர்கள் செயல்பட்டனர். அப்போதைய துறை அமைச்சரான சுப்ரமணியன், முதன்மைச் செயலாளர், கலெக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் மருத்துவமனையை ஆய்வு செய்து பணியை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இவர்கள் அனைவருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் ஒரே பதில் இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்து விடும் என்ற ஒற்றை வார்த்தைதான். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தொகுதி எம்.எல்.ஏ.,வான பழனிசாமி நோயாளிகளின் சிரமத்தை நேரில் கண்டு வேதனையுடன், கட்டுமானப் பணி நடைபெறும் மருத்துவமனையை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்து திறக்கப்படும் என்ற அதே ஒற்றை வார்த்தையை தான் கூறினர்.
மக்கள் நலனுக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு முழுமை பெறாமல் அரைகுறையாக நிற்கும் அவலத்திற்கு காரணம் என்ன என்பதை பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கண்டறிந்து, சாக்குப் போக்கு சொல்லும் அதிகாரிகளின் தில்லு முல்லுவிற்கு முடிவு கட்டும் வகையில் ஊழலுக்கு விலை போன அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி ரீ டெண்டர் மூலம் பணியை நிறைவு செய்து, மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
