காமராஜர் சாலை அகலப்படுத்துவது... எப்போது? கச்சிராயபாளையம் மக்கள் எதிர்பார்ப்பு
காமராஜர் சாலை அகலப்படுத்துவது... எப்போது? கச்சிராயபாளையம் மக்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 21, 2026 08:14 PM
ADDED : ஜூன் 21, 2026 07:22 PM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொது கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் தினசரி தேவைகளுக்காக கச்சிராயபாளையம் வந்து செல்கின்றனர். மேலும் கச்சிராயபாளையத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கச்சிராயபாளையம் சுற்றுபுற பகுதி மற்றும் கல்வராயன்மலை பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி செல்வதற்கும் கச்சிராயபாளையம் வழியாக செல்ல வேண்டி உள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு கச்சிராயபாளையம் வழியாக தினமும் நுாற்றுகணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், தலைவாசல், ஆத்துார், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் கச்சிராயப்பாளையம் மாணவர்களை அழைத்து செல்கின்றனர்.
கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கும் நேரத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான கரும்பு லோடு டிராக்டர்கள் கச்சிராயபாளையம் , காமராஜர் சாலை வழியாக செல்கின்றன.
கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஜவ்வரசி ஆலைகளுக்கு லாரிகளில் எடுத்து செல்கின்றனர். அறுவடை செய்யப்படும் நெல் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
இதனால் நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் லோடு எடுத்து செல்லும் லாரிகள், கரும்பு டிராக்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கச்சிராயபாளையம் காமராஜர் சாலை வழியாக செல்கிறது. இந்நிலையில், வாரந்தோறும் கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் வாரச்சந்தையும் நடந்து வருகிறது.
கச்சிராயபாளையம் காமராஜர் சாலை மற்றும் எல்.எப்., சாலை ஆகியவை காவல் நிலையம் அரகே துவங்கி அம்மாபேட்டை வரை மிகவும் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுகி உள்ளது. குறிப்பாக லோடு வாகனங்கள் செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கச்சிராயபாளையம் பகுதியில் இயங்கும் கடைகளுக்கு லாரிகளில் வரும் லோடு இறக்கும்போதும், சாலை ஓரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால், மக்கள் நடந்து செல்ல இடமின்றி கடும் டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
சாலையோரம் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இச்சாலையில் மாவட்ட கலக்டரின் வாகனம் கூட பல நேரம் டிராபிக் ஜாமில் சிக்கியுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை பலமுறை அளவீடு செய்து, அதற்கான (மார்க்கிங்) குறி செய்யப்பட்டது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்ற இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலபடுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
