திருக்கோவிலுார் தெப்பக்குளத்தை புதுப்பிப்பது... எப்போது?நிலவரை கால்வாயை புனரமைக்க கோரிக்கை
திருக்கோவிலுார் தெப்பக்குளத்தை புதுப்பிப்பது... எப்போது?நிலவரை கால்வாயை புனரமைக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 07, 2026 06:26 PM
ADDED : ஜூலை 07, 2026 03:52 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி துவங்கி மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இடியாப்ப சிக்கலில் சீரழிந்து கொண்டிருக்கிறது.
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தாலும், வாய்க்கால் மூலம் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும். ஏரியிலிருந்து கெங்கை அம்மன் கோவில் அருகே பெரிய மதகு ஒன்று உள்ளது. இந்த மதகை திறந்தால், நிலவரை கால்வாய் மூலம் இரட்டை விநாயகர் கோயில் அருகே உள்ள செவ்வக வடிவ கருங்கல் தொட்டிக்கு சென்று நேராக கிழக்கு திசை நோக்கி தெற்கு வீதி, வடக்கு வீதி, மதுரை வீரன் கோவில் தெரு வழியாக 400 மீட்டர் பயனித்து தெப்பக்குளத்தை சென்றடைகிறது.
அதேபோல் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து பிரியும் மற்றொரு கால்வாய் பெருமாள் நாயக்கர் தெரு வழியாக 300 மீட்டர் சென்று தீர்த்த குளத்தில் கலக்கும். இந்த கால்வாய்கள் இரண்டடி அகலம், நான்கடி உயரம் கொண்டது. செதுக்கப்பட்ட கருங்கற்களால் கீழ்பகுதி, சைடு கற்கள், மேற்பகுதி சுண்ணாம்பு கலவை கட்டுமானத்தால் மிக நேர்த்தியாக முழுக்க மூடப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீள் செவ்வக வடிவ தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கருங்கல் பலகையால் மூடப்பட்டிருக்கிறது.
கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை எடுத்துவிட்டு தேங்கி இருக்கும் மண்ணை வெளியேற்றுவதன் மூலம் கால்வாய் அடைப்பு முழுவதுமாக சீரடையும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள தொன்மையான நிளவரைக் கால்வாய். இதனை முறையாக பராமரிக்காத காரணத்தால் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு குளம் அவ்வப்பொழுது வற்ற தொடங்கியது.
இக்கால்வாயை துார்வாரி சீரமைத்து தெப்பக்குளத்தில் சரிந்து போன நீராழி மண்டபத்தை புனரமைத்து, குளத்தை மேம்படுத்த வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு 2023 ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கியது.
நிலவரை கால்வாயை துார் வாருவதற்கு பதிலாக புதிதாக, மார்க்கெட் வீதி வழியாக குழாய் புதைக்கப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிக செலவில்லாமல் எளிய வழியில் நிலவரைக் கால்வாயை துார்வாரினால் தண்ணீரை குலத்திற்கு கொண்டு செல்லலாம் இதனை விடுத்து அரசு பணத்தை வீணடிக்கும் நோக்கத்தில் சாத்தியப்படாத திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொள்வதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதனை எல்லாம் பொருட்படுத்தாத அதிகாரிகள் மார்க்கெட் வீதி வரை குழாய் பதிக்கப்பட்ட நிலையில், பம்பிங் முறையில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்ட செயல்பாட்டில் பல்வேறு இடர்பாடுகளும், திட்டம் முழுமை அடைந்தாலும் நோக்கம் நிறைவேறாது என்ற நிலை வெளிப்படையாக தெரிய துவங்கியதால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல் குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் கட்டுவதற்கு கடகால் தோண்டப்பட்டு தண்ணீர் தேங்கிய நிலையில் அதுவும் அப்படியே கிடக்கிறது.
குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோடிக்கணக்கில் செலவழித்து சாத்தியமில்லாத புதிய வழித்தடத்தை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே தெப்பக்குள சீரமைப்பு பணி அரைகுறையாக நிற்க காரணம் என்கின்றனர் விவரம் அறிந்த உள்ளூர் வாசிகளும், பொதுமக்களும்.
இனியும் காலம் கடத்தாமல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பழைய பாதாள கால்வாயை, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்து, நகராட்சி துாய்மை பணியாளர்களைக் கொண்டு துார்வாரி சீரமைத்தால், செலவுகளை மிச்சப்படுத்தி, குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது மிக எளிது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை இவ்விஷயத்தில் ஈகோ இல்லாமல் இனியாவது மாற்று வழி திட்டத்தை கைவிட்டு, நிலவரை கால்வாயை புனரமைக்க வேண்டும். உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள், சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருக்கும் நிலையில், எதிர்வரும் பிரமோற்சவ விழாவின் போது குளத்தில் பெருமாள் தெப்பத்தில் உலா வரும் வைபவத்தை எதிர்வரும் தலைமுறையினர் மறந்துவிடாமல் கண்டு ரசித்து பாரம்பரியத்தை பேணி காக்க தெப்பக்குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பார்க்காத உள்ளது.
