/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்படுமா?
/
தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்படுமா?
ADDED : ஏப் 30, 2024 11:26 PM
திருக்கோவிலுார் : தென்பெண்ணையாற்றில் ஆய்வு நடத்தி தடுப்பணை கட்ட பொதுப்பணி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட சாத்தனுார் அணையைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பிக்கப் அணைக்கட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுார், எல்லீஸ், சொர்ணாவூர் உள்ளிட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டது. இதனால், பெண்ணையாற்றில் வறட்சி காலங்களில் கூட தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்.
ஆனால் தற்போது, செஞ்சி கூட்டுக் குடிநீர் திட்டம், சின்னசேலம் கூட்டுக் குடிநீர் திட்டம், கள்ளக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம், வேட்டவலம் கூட்டுக் குடிநீர் திட்டம் என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பெரும்பாலான நகரம் மற்றும் கிராம பகுதிகளுக்கு பெண்ணையாற்றில் திறந்த வெளி கிணறு அமைத்தும், ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாது அரசு மணல் குவாரிகளை ஏற்படுத்தி பல மீட்டர் ஆழத்திற்கு மணலை கொள்ளையடித்ததன் மூலம் மழைக் காலங்களில் மணல் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை பாதுகாக்கும் கட்டமைப்பும் சிதைக்கப்பட்டுள்ளது.
எனவே சாத்தனுார் அணை திறக்கப்பட்டால் மட்டுமே தென்பெண்ணையில் தண்ணீரை பார்க்க முடியும் என்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் பணியும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மணலுார்பேட்டை, விளந்தை, வீரசோழபுரம் என பெண்ணை ஆற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகளை ஏற்படுத்தும் சாத்திய கூறுகள் இருப்பதாக நீர்நிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை அரசு கவனத்தில் கொள்ளாமல், கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தண்ணீரை உறிஞ்சுவதும், அரசு மணல் குவாரியை ஏற்படுத்துவதிலும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதால் பெண்ணை ஆறு முற்றிலுமாக வறண்டு கிடக்கிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் உருவாகும்.
அரசு மணல் குவாரியை உருவாக்குவது, நிலத்தடி நீரை உறிஞ்சுவது என இயற்கை வளத்தை சீரழிக்கும் பொதுப்பணித்துறை, அதனை சமநிலைப்படுத்த சாத்திய கூறுகள் உள்ள இடங்களில் தடுப்பணைகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.