/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
/
அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா?
ADDED : ஆக 01, 2024 07:35 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில், திருக்கோவிலுார் தொகுதி விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 30 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சீரமைக்கப்பட்டாலும், பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் இயங்கும் உள்ளூர் கிரிக்கெட் ஆர்வலர்களின் ஆதரவுடன், பேரூராட்சி நிர்வாகமும் விளையாடுவதற்கு தேவையான நிலப்பரப்பை அவ்வப்போது ஜே.சி.பி., மூலம் சீரமைத்து தருகிறது.
உள்ளூர் கிரிக்கெட் கிளப் சார்பில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வந்து விளையாடுகின்றனர். மாதம்தோறும் டோர்னமென்ட் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 36 கிரிக்கெட் அணியினர் இரவு பகல் ஆட்டத்தின் மூலம் இரண்டு நாட்கள் போட்டிகளை நடத்தினர். அதில், விழுப்புரம் மற்றும் அரகண்டநல்லுார் ப்ரண்ட்ஸ் கிளப் இடையே நடந்த பைனல் போட்டியில் பிரண்ட்ஸ் கிளப் கோப்பையை தட்டிச் சென்றது.
மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். போட்டிகள் மட்டுமின்றி ஏரளாமான விளையாட்டு வீரர்கள், தாங்கள் சார்ந்த விளையாட்டில் தீவிர பயிற்சியிலும், ஈடுபடுவர்.
ஆனால், மைதானத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், தொகுதி விளையாட்டு அரங்கம் அமைக்கும் அரசின் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தொகுதி விளையாட்டு அரங்கம் அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.