/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
திருக்கோவிலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருக்கோவிலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருக்கோவிலுார் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : மே 14, 2024 06:16 AM
திருக்கோவிலுார்: இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுாரில் விரிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், பஸ் நிலையம் அருகில் இருந்த பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட சில இடங்கள் அகற்றப்பட்டு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும், பயணிகள் அமர நிழற்குடை உள்ளிட்ட வசதி ஏற்படுத்த இடமில்லாததால் பேரூராட்சியைச் சுற்றியிருந்த கடைகளை அகற்ற அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், கடைக்காரர்கள் கோர்ட்டுக்குச் சென்றனர். இதனால் கடைகள் அகற்றம் நிறுத்தப்பட்டது. பஸ் நிலையம் குறுகிய இடத்தில் கட்டி முடித்து திறக்கப்பட்டது.
தற்போது, நகராட்சியாக தரம் உயர்ந்திருக்கும் நிலையில், வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. திருக்கோவிலுார் வழியாக தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கும் அதிகப்படியான பஸ்கள் சமீப நாட்களாக இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க இடமின்றி தவித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு முன்பாக பயணிகள் நிற்க ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்தை கடைக்காரர்களே ஆக்கிரமித்து கடையை விரிவுபடுத்திக் கொண்டனர்.
குறிப்பாக சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு பஸ்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் இருக்கும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், காவல்துறை இணைந்து அகற்றி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, புறவழிச் சாலையுடன் இணைக்கும் வகையில் புதிய பஸ் நிலையத்தை உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

