/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுமா?: அசுத்தமான நீரை பருகுவதால் உயிருக்கு ஆபத்து
/
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுமா?: அசுத்தமான நீரை பருகுவதால் உயிருக்கு ஆபத்து
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுமா?: அசுத்தமான நீரை பருகுவதால் உயிருக்கு ஆபத்து
போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுமா?: அசுத்தமான நீரை பருகுவதால் உயிருக்கு ஆபத்து
ADDED : மார் 05, 2025 11:17 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் என்பது இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் மாசுபட்டு வருவதால், அதனை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அதனை நம்பி இருக்க முடியவில்லை. இதன் காரணத்தால் வேறு வழியின்றி பொதுமக்கள் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அவலம்
கேன்களில் அடைக்கப்பட்டிருந்தாலே அது சுத்தமான குடிநீர் தான், என்ற மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டு விட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி, பல போலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மாசுபட்ட நீரை கேன்களில் அடைத்து விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நீரை பயன்படுத்துபவர்களுக்கு மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாசுபட்ட குடிநீர் விற்பனை முறைகேட்டை கை கட்டி வேடிக்கை பார்க்கும் அவலம் உள்ளது.
சுத்தமான குடிநீர்
மாவட்டத்தில் அனுமதி பெற்று செயல்படும், சுத்திகரிப்பு நிலையங்களில் அரசு வகுத்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் மாசுபட்ட குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சுத்திகரிப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் குளோரினேஷன், மணல் வடிகட்டுதல், கார்பன் வடிகட்டுதல், புற ஊதா கிருமி நீக்கி அமைப்பு உள்ளிட்ட நிலைகளை கடந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதனை விற்பனை செய்வதற்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று அவசியம்.
முறைகேடு
ஆனால் இவை எதுவுமே முறையாக பின்பற்றப்படாமல் சுத்திகரிப்பு நிலையங்களின் இருந்து குடிநீர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கிராமங்களிலும் கேன் குடிநீரை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதற்கான குடிநீரை உற்பத்தி செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் குடிநீர் கேன் விற்பனை தினசரி தடையின்றி நடப்பது புரியாத புதிராக உள்ளது. குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் சிலர், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வாங்கி வரும் குடிநீருடன் போர்வெல் தண்ணீரை கலந்து அதனை மீண்டும் கேன்களில் அடைத்து விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது.
நடவடிக்கை தேவை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இரட்டிப்பு லாபம் கிடைப்பதாலும், அதிகாரிகள் கண்டு கொள்ளாததாலும் பொதுமக்களுக்கு இலவசமாக நோய் பரப்பும் பணியை சமூக விரோதிகள் செய்து வருகின்றனர். கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் தரமானதாக இருக்கும் என்று நம்பி பொதுமக்கள் வாங்கி குடிக்கின்றனர். கோடை காலம் துவங்க உள்ளதால், கேன் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேன் குடிநீரில் நடக்கும் முறைகேட்டை தடுத்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்,' என்றனர்.