/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடுப்பணையில் உடைந்த மதகு சீரமைக்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தடுப்பணையில் உடைந்த மதகு சீரமைக்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு
தடுப்பணையில் உடைந்த மதகு சீரமைக்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு
தடுப்பணையில் உடைந்த மதகு சீரமைக்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 19, 2024 12:17 AM

தியாகதுருகம்:விருகாவூர் தடுப்பணையில் சேதமடைந்த மதகை பொதுப்பணித் துறை அதிகாரிகள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு தியாகதுருகம் ஒன்றியம் வழியே செல்கிறது.
இதன் குறுக்கே விருகாவூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அருகில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும் வகையில் மதகு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாகலுார், வடபூண்டி,, கண்டாச்சிமங்கலம், புதுஉச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
கல்வராயன் மலையில் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது.
கன மழைக் காலங்களில் ஏரிகள் நிரம்பியதும் ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்த மதகு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் ஏரி உடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
தடுப்பணையின் வடக்கு கரையை ஒட்டி அமைந்துள்ள மதகு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்தபோது சேதம் அடைந்தது.
அதன் பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தடுப்பணியில் இருந்து கால்வாய் மூலம் சுற்றியுள்ள ஏரிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
இதனால் ஏரியின் கொள்ளளவை மீறி நீர்வரத்து அதிகரிப்பதால் ஏரியின் கரைகள் உடையும் அபாயம் ஏற்படுகிறது.
உடைந்த மதகை சீரமைக்காததால் அளவு கடந்த தண்ணீர் வெளியேறி ஏரிகளுக்குச் செல்வதால் கனமழை பெய்யும் காலங்களில் நாகலுார் ஏரி உடையும் அபாயம் உருவாகி மக்கள் அச்சம் அடைகின்றனர்.
உடைந்த மதகை சீரமைக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
அதேபோல் தடுப்பணையில் இருந்து நாகலுார் ஏரி வரை உள்ள வரத்து வாய்க்கால் முட்செடிகள் வளர்ந்து கரைகள் சேதம் அடைந்துள்ளது.
உடனடியாக தடுப்பணை மதகினை செப்பனிட்டு ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.