/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிடப்பில் உள்ள 'ரிங் ரோடு' திட்டம் செயல்பாட்டிற்கு... வருமா? கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
/
கிடப்பில் உள்ள 'ரிங் ரோடு' திட்டம் செயல்பாட்டிற்கு... வருமா? கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
கிடப்பில் உள்ள 'ரிங் ரோடு' திட்டம் செயல்பாட்டிற்கு... வருமா? கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
கிடப்பில் உள்ள 'ரிங் ரோடு' திட்டம் செயல்பாட்டிற்கு... வருமா? கள்ளக்குறிச்சியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 03, 2025 07:10 AM
கள்ளக்குறிச்சி கடந்த 2019ம் ஆண்டு தனி மாவட்டமாக உதயமானது. மாவட்டம் துவக்க விழாவில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 'ரிங் ரோடு' திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் நகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
பொதுமக்கள் தினசரி அன்றாட தேவைக்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரி செல்லவும் நகர பகுதியை நோக்கி வருவதால் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்கள், அலுவல் காரணமாக வெளியூர் சென்று மாவட்ட அலுவலகம் திரும்பும் அரசு துறை அதிகாரிகள் அவ்வப்போது நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர்.
தியாகதுருகம் மார்க்கத்திலிருந்து கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரை கடந்து கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்வதாலும் போக்குவரத்து பாதிக்கிறது.
குறிப்பாக, சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி கொள்கிறது.
கிடப்பில் திட்டம்
சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் வேலு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நகரை சுற்றிலும் 'ரிங்' ரோடு திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தார்.இத்திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக நகரைச் சுற்றிலும் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை அமைவிடம் பற்றிய வரைபடம் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆனால், அதன்பின் இத்திட்டம் செயல் வடிவம் பெறாமல் கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நீலமங்கலம் பைபாசில் பெருவங்கூர் சாலையில் துவங்கி சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒட்டியவாறு அமைத்து ரிங் ரோடு மாமாந்துார் வழியாக சங்கராபுரம் சாலையில் இணைக்க வேண்டும்.
சங்கராபுரம் சாலையில் ரிங் ரோடு மாமாந்துாரில் இருந்து சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வழியாக கச்சிராயபாளையம் சாலையுடன் இணைக்க வேண்டும்.
தச்சூர் பகுதியில் இருந்து குடிகாடு, காரனுார் வழியாக கச்சிராயபாளையம் சாலையில் இணைக்க வேண்டும். அவ்வாறு 'ரிங் ரோடு' அமைக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். இதற்கு அமைச்சர் வேலு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.