/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் எல்லை விரிவுபடுத்தப்படுமா? மாவட்ட மறு வரையறை தேவை என கோரிக்கை
/
திருக்கோவிலுார் எல்லை விரிவுபடுத்தப்படுமா? மாவட்ட மறு வரையறை தேவை என கோரிக்கை
திருக்கோவிலுார் எல்லை விரிவுபடுத்தப்படுமா? மாவட்ட மறு வரையறை தேவை என கோரிக்கை
திருக்கோவிலுார் எல்லை விரிவுபடுத்தப்படுமா? மாவட்ட மறு வரையறை தேவை என கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 04:58 AM
திருக்கோவிலுார் நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் வேகமாக வளர்ந்து வரும் நகரம். அதற்கேற்ப நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். திருக்கோவிலுாரும், அரகண்டநல்லுாரும் இணைந்தே இருந்த சூழலில், அரகண்டநல்லுாரை, விழுப்புரம் மாவட்டத்துடனும், திருக்கோவிலுாரை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனும் பிரித்தது, திருக்கோவிலுார் நகர வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருந்து வருகிறது.
இருப்பினும், திருக்கோவிலுார் தொகுதி என்ற அந்தஸ்தில் அரகண்டநல்லுார், திருக்கோவிலுாரின் ஒரு அங்கமாக இன்று வரை இருந்து வருகிறது. இச்சூழலில் திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அதன் எல்லையை விரிவுபடுத்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனுார், அரும்பாக்கம், ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது.
இதனை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் தங்களுக்கான அரசின் சலுகைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் எதிர்ப்பையும் அரசு கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடாக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் தற்போது பேரூராட்சியாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லுாரை, திருக்கோவிலுாருடன் இணைக்கலாம். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
மேலும் திருக்கோவிலுாரின் அருகாமையில் உள்ள வளர்ந்த நகரமான மணம்பூண்டியையும் திருக்கோவிலுாருடன் சேர்க்கலாம். இதற்கெல்லாம் திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.
இதன் மூலம் திருக்கோவிலுார் நகராட்சியை தரம் உயர்த்த முடியும். அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் திருக்கோவிலுார் ஒரு மாவட்ட தலைநகரின் அந்தஸ்தை பெற முடியும்.
கடந்த காலத்தில் திருக்கோவிலுார் கோட்டத்தில் விழுப்புரம் இருந்தது. இன்று, விழுப்புரம் மாவட்டம் தலைநகரமாகி, அங்கிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சியும் தலைநகரமாகி விட்டது.
ஆனால் திருக்கோவிலுார் அதன் வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பின் தங்கி விட்டது. இதற்கெல்லாம் காரணம் அரசியல் பின்னணியே. இனியும் இதுபோன்ற நிலை நிகழாமல் இருக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கு அடித்தளமாக மாவட்ட தலைமை மருத்துவமனை 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் திருக்கோவிலுாரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அடித்தளமாக திருக்கோவிலுார் நகராட்சியுடன், அரகண்டநல்லுார் பேரூராட்சி, மணபூண்டி ஊராட்சி ஆகியவற்றை இணைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ப்பது நகரின் வளர்ச்சிக்கு அடித்தளம் ஆகும்.
இதன் காரணமாகவே இப்பகுதி மக்கள் திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் வகையில் அதற்கான செயல் திட்டங்களை பெற்று ஆலோசித்து வரும் நிலையில், விரைவில் நடைபெற உள்ள மானிய கோரிக்கை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

