/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முடியனுாரில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது
/
முடியனுாரில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது
ADDED : செப் 25, 2024 06:50 AM

கள்ளக்குறிச்சி : முடியனுாரில் கோரிக்கைகயை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில், முடியனுார் பஸ்நிறுத்தம் அருகே பொதுமக்கள் சிலர் நேற்று காலை 9:10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முடியனுாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2020-21ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டடம் கட்ட இடம் கொடுத்தும் புதிய வகுப்பறை கட்டாமல் மூன்று ஆண்டுகளாக அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய தர்மராஜ்,42; கோவிந்தராசு,35; விஜய்,28; உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.