/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதல்; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 12 பேர் காயம்
/
தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதல்; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 12 பேர் காயம்
தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதல்; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 12 பேர் காயம்
தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதல்; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 12 பேர் காயம்
ADDED : மார் 22, 2025 07:28 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ராமதாஸ்,65; டேங்கர் லாரி டிரைவர். இவர், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் சிட்கோவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு நேற்று காலை விழுப்புரம் நோக்கிச் புறப்பட்டார்.
காலை 11:25 மணிக்கு உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே உள்ள இணைப்புச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, டிஎன்- 31-ஏபி-4141 பதிவெண் கொண்ட ஸ்ரீராம விலாஸ் என்ற தனியார் பஸ் 55 பயணிகளுடன் கடலுாரில் இருந்து உளுந்துர்பேட்டைக்குச் செல்வதற்காக விதிகளை மீறி டோல்கேட் அருகே சாலையின் குறுக்கே கடந்தபோது, ராமதாஸ் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டு மணிகண்டன்,35; பஸ்சில் பயணிகள் பண்ருட்டி போலீஸ் லைன் முஸ்தபா,49; கீழ்கவரப்பட்டு சுப்ரமணியன் மனைவி தீபா, 49; திருநாவலுார் ஜெய்னுலாபுதீன் மனைவி நுார்ஜஹான், 65; உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்த உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் நடவடிக்கை வீண்
உளுந்துார்பேட்டை - சேந்தநாடு நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
மேலும், டோல்கேட் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலம் வழியாக செல்லும் போது மேம்பாலத்தில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீசார் இணைப்பு சாலை பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குறுக்கே செல்லாதவாறு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பேரிகார்டுகள், சிமென்ட் தடுப்பு கட்டைகள் அமைத்தனர்.
இணைப்பு சாலை வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மினி டெம்போ ஆகிய வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் வழி வைத்திருந்தனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் ஓரிரு நாட்களாக இரவு நேரங்களில் இணைப்பு சாலையின் நடுவே உள்ள பேரிகார்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையின் குறுக்கே கடந்து உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலத்தின் வழியாக செல்லும் வகையில் வழியை ஏற்படுத்தியிருந்தனர்.
சாலை நடுவே உள்ள பேரிக்கார்டுகளை அகற்றியதால் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது.