/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 12,963 மனுக்கள்... குவிந்தன; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் ஆர்வம்
/
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 12,963 மனுக்கள்... குவிந்தன; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் ஆர்வம்
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 12,963 மனுக்கள்... குவிந்தன; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் ஆர்வம்
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 12,963 மனுக்கள்... குவிந்தன; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் ஆர்வம்
UPDATED : ஜூலை 29, 2025 08:12 AM
ADDED : ஜூலை 29, 2025 07:18 AM

தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சென்று வழங்கிடும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற முகாமினை கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் நவ., மாதம் வரை 10 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 39, ஊரகப்பகுதிகளில் 123 என மொத்தமாக 162 முகாம்கள் நடைபெற உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் நடைபெறும் முகாமில், 13 துறைகளுக்குட்பட்ட 43 சேவைகளும், ஊரக பகுதியில் நடைபெறும் முகாமில், 15 துறைகள் சார்ந்த 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
முகாம் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒன்றியம் வாரியாக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் 'நோடல் அலுவலர்' ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் பணிகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் 1,288 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்கான படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த 7ம் தேதி துவங்கியது. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள் வீடு வீடாக சென்று முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத அனைவரும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர்.
இது தவிர, ஜாதி சான்று, பட்டா மாற்றம், வீட்டு மனை பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, வங்கி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி, மருத்துவ காப்பீட்டு அட்டை, ரேஷன் கார்டு சேவைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம் என அறிவுறுத்தினர். முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கடந்த 7 நாட்களில், 36 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில், தற்போது பல்வேறு விதிமுறைகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் முகாம் நடைபெறும் இடங்களில் குவிந்து ஆர்வமுடன் மனு அளித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 36 இடங்களில் நடந்த முகாமில், மொத்தமாக, 16,985 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் அனைத்தும் துறை வாரியாக பிரித்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மொத்த மனுக்களில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு 12,963 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது பெறப்பட்ட மொத்த மனுக்களில் 75 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. மின்சார வாரிய துறை சார்ந்து பெறப்பட்ட மனுக்களில், 96 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.