/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மீண்டும் கள்ளச்சாராயம் ஊறல்; கல்வராயன் மலையில் 2 பேர் கைது
/
மீண்டும் கள்ளச்சாராயம் ஊறல்; கல்வராயன் மலையில் 2 பேர் கைது
மீண்டும் கள்ளச்சாராயம் ஊறல்; கல்வராயன் மலையில் 2 பேர் கைது
மீண்டும் கள்ளச்சாராயம் ஊறல்; கல்வராயன் மலையில் 2 பேர் கைது
UPDATED : அக் 14, 2024 06:52 AM
ADDED : அக் 14, 2024 04:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதிகளில் ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 68 பேர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மெத்தனால் சப்ளை செய்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்தனர். இதில், 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதியின் அதிரடி நடவடிக்கையால் சாராய விற்பனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், சிறப்பு அதிரடி படை போலீசார் கல்வராயன்மலையில் தங்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாக கல்வராயன்மலை பகுதியில் சிலர் மீண்டும் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டனர். எஸ்.பி., கல்வராயன்மலைப்பகுதியில் கடந்த 5ம் தேதி சோதனை மேற்கொண்டார்.
அப்போது, ஈச்சங்காடு, வண்டகபாடி கிராமங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் காய்ச்ச பயன்படும் 2,800 கிலோ வெல்லம், கண்ணுார் காட்டுகொட்டாய் பகுதியில் இருந்த 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து, அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, போலீசார் கடந்த, 11ம் தேதி மேற்கொண்ட சோதனையில் 800 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனையில், 100 லிட்டர் சாராய ஊறல், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து, தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன், 58, வெள்ளரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை, 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.
பலரது உயிரிழப்புக்கு பிறகும் எவ்வித தயக்கமுமின்றி சிலர் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்யும் பணியில் மீண்டும் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.