/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 499 பேர் ஆஜர்
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 499 பேர் ஆஜர்
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 499 பேர் ஆஜர்
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 499 பேர் ஆஜர்
ADDED : மே 16, 2025 02:45 AM

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில், 5 பெண்கள் உட்பட 499 பேர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு, ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவர வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார்வையிலான போலீசார் விசாரித்தனர்.
இதில் பள்ளியில் சூறையாடியது, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம், 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி உட்பட 615 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார், 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து, 615 பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வழங்கினர். இந்த வழக்கில் தொடர்புடைய, 4 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று நீதிபதி ரீனா முன்னிலையில் 499 பேர் ஆஜராகினர். வெளிநாட்டில் உள்ள 7 பேர் உட்பட 112 பேர் ஆஜராகவில்லை. கோர்ட்டில் ஆஜரான அனைவருக்கும் 'சிடி' மூலம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணையை, வரும் ஜூலை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் டி.எஸ்.பி., தேவராஜ் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.