/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
500 கிலோ குட்கா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது
/
500 கிலோ குட்கா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது
ADDED : மே 17, 2025 04:00 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே, 500 கிலோ குட்கா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் குட்கா கடத்தப்படுவதாக, விழுப்புரம் எஸ்.பி.,சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் உள்ளிட்ட தனிப்படை போலீசார், நேற்று காலை 8:00 மணிக்கு திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சந்தேகத்திற்குரிய வகையில் வந்து கொண்டிருந்த 'ஸ்கார்ப்பியோ' காரை மடக்கினர்.
அந்த கார், போலீசாரை கண்டதும் திரும்பி, திருக்கோவிலுார் மார்க்கமாக அதி வேகமாக சென்றது. இதுகுறித்து உடனடியாக, காணை மற்றும் அரகண்ட நல்லுார் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அரகண்டநல்லுார் போலீஸ் நிலையம் எதிரில், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உள்ளிட்ட போலீசார் அந்த காரை மறித்தனர். ஆனால் கார் அங்கு நிற்காமல், திரும்பி விழுப்புரம் மார்க்கமாக சென்றது.
வடகரைதாழனூர் கூட்டு சாலையில் விரைந்த அந்த கார் மீது, எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த லியோ சார்லஸ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தை மோதினர்.
இதையடுத்து அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கார் டிரைவர் உள்ளிட்ட இருவர், அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினர். போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்து, அரகண்டநல்லுார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அந்த காரில், 500 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜாலூர் மாவட்டம், சாசோ ஜாலுாரை சேர்ந்த பவுன்மாராம் மகன் ஜாம்தாராம், 24; முக்காராம் மகன் மணீஷ் 20; என தெரிந்தது.
மேலும், பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு, 50 மூட்டைகளில் 500 கிலோ குட்கா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் கார், குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.