ADDED : செப் 02, 2026 05:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள 64 ரேஷன் கடைகள் மூலமாக இன்று (3ம் தேதி) வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
சட்டசபை கூட்டத்தொடரில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டும், வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையிலும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
அதன்படி, மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 64 ரேஷன் கடைகளில் இன்று வெங்காயம் விற்பனை துவங்கப்படுகிறது.
இதற்காக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மேற்பார்வையில், 10 டன் எடையுள்ள வெங்காயம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.
