/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி; திருச்செந்துார் சென்று திரும்பியபோது பரிதாபம்
/
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி; திருச்செந்துார் சென்று திரும்பியபோது பரிதாபம்
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி; திருச்செந்துார் சென்று திரும்பியபோது பரிதாபம்
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி; திருச்செந்துார் சென்று திரும்பியபோது பரிதாபம்
UPDATED : செப் 26, 2024 07:52 AM
ADDED : செப் 26, 2024 02:57 AM

உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 21, டிரைவர். இவர், 'மகேந்திரா மேக்ஸ்' வேனில், அப்பகுதியைச் சேர்ந்த 23 பேரை, 23ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தரிசனம் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர மரத்தில் வேகமாக மோதி நொறுங்கியது.
இதில், வேனில் பயணித்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன், 52, சக்தி, 20, செல்வம், 50, துரை, 43, ராமலிங்கம், 50, ரவி, 60, தனம், 50, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வேன் டிரைவர் வசந்தகுமார் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
ஓய்வின்றி, துாக்கக் கலக்கத்தில் அசுர வேகத்தில் அந்த வேனை, டிரைவர் ஓட்டியதால், விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.
விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.