/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதிய உணவில் பல்லி; 87 பேருக்கு சிகிச்சை
/
மதிய உணவில் பல்லி; 87 பேருக்கு சிகிச்சை
ADDED : செப் 09, 2025 12:24 AM

திருக்கோவிலுார்; பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ - மாணவியர் உட்பட, 87 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், நேற்று மதிய உணவு தயார் செய்து, மாணவர் களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மனைவி பூஞ்சோலை, 47, தன் தம்பி மகன் வல்லரசு, 12, வாங்கி வந்த மதிய உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை தான் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக, பள்ளிக்கு சென்று சத்துணவு பொறுப்பாளர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
இத்தகவல் பரவியதால், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை மணலுார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால், 108 ஆம்புலன்சில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், உணவு அருந்திய 15 பெரியவர்கள், 35 மாணவர்கள், 37 மாணவியர் என, 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.