ADDED : நவ 11, 2024 05:14 AM

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உலர்களாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மற்றும் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை சுற்று வட்டார பகுதியில் பருநிலை மாற்றங்களுக்கேற்ப மக்காசோளம், நெல், கம்பு, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை செய்யப்படும் பயிர்களை தனியாக பிரித்து உலர வைத்து, மார்க்கெட் கமிட்டிகளுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் அப்பகுதியில், போதிய உலர்களம் வசதியின்றி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து மிகுதியான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகள், உயர்மட்ட பாலங்கள், கிராமப்புறச் சாலைகளில் அதிகளவில் பயிர்களை காய வைக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
தற்போது மக்காசோளம் அறுவடை பணிகள் நடக்கிறது. சூளாங்குறிச்சி மணிமுக்தா ஆற்றின் குறுக்கே செல்லும் உயர்மட்ட பாலத்தின் ஒரு திசையில் மக்காசோளம் பயிர்கள் காயவைக்கப்பட்டு வருகிறது.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் உலர்களம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.