/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்தில் சிக்கிய லாரியில் காஸ் கசிவால் பரபரப்பு
/
விபத்தில் சிக்கிய லாரியில் காஸ் கசிவால் பரபரப்பு
ADDED : நவ 16, 2024 05:18 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்சிங், 48; லாரி டிரைவரான இவர், டில்லியில் இருந்து இரும்பு பட்டைகளை ஏற்றிக் கொண்டு விருத்தாசலத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
நேற்று மதியம் உளுந்துார்பேட்டையில், விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே வந்தபோது, சர்வீஸ் சாலையில் செல்லாமல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது துாரம் சென்றவர் லாரியை பின்னோக்கி ஓட்டினார்.
அப்போது, கொல்கத்தாவில் இருந்து புதுக்கோட்டைக்கு இரும்பு பொருள் மற்றும் மிளகாய் வற்றல் ஏற்றி வந்த டாராஸ் லாரி மோதியது. அதில், டாராஸ் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. லாரி டிரைவரான பரமக்குடியைச் சேர்ந்த முருகவேல்,50; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆனால், அவர் சமைப்பதற்காக லாரியில் வைத்திருந்த மினி சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டது. அதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கசிவு ஏற்பட்ட மினி சிலிண்டரை பாதுகாப்பாக லாரியில் இருந்து அப்புறப்படுத்தி, ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து பெரும் விபத்தை தடுத்தனர்.
இச்சம்பவம் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 1:30 மணி முதல் 2:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.
உளுந்துார்பேட்டை மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.