ADDED : ஜூன் 20, 2024 03:54 AM

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதித்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னசாமியின் மனைவி முத்தாயி பேட்டி:
மாதாவாச்சேரியில் வழக்கமாக குடிக்கும் இடத்தில் ரூ.50க்கு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தார். காலையில் எழுந்தது முதல் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கிருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எங்கள் ஊரில் மேலும் பலர் சாராயம் குடித்து இறந்துள்ளனர் என்றார்.
லஞ்சம் கொடுத்து
சாராயம் விற்கின்றனர்
மணி மனைவி பாப்பாத்தி:
வழக்கமாக விற்கும் இடத்தில் சாராயம் குடித்து இதுவரை யாரும் இறந்தது கிடையாது. நேற்று காலை 5:00 மணிக்கு சாராயம் குடித்தவர், காலை 11:00 மணிக்கு நெஞ்சு எரிவதாக கூறினார். உடன் அவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கிருந்து ஜிப்மர் கொண்டு வந்தோம்.
லஞ்சம் கொடுத்து சாராயம் விற்கின்றனர். அவர்களை எங்களால் கேட்க முடியுமா? கல்வராயன் மலையில் இருந்து வாங்கி வந்து ஆற்றின் அருகில் விற்பனை செய்கின்றனர். சாராயம் விற்பனையை அரசு தடுக்காததால் இத்தனை உயிர்கள் இன்று பலியாகி உள்ளது என்றார்என கூறினர்.

