sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக பொறுப்பும் கற்பிப்பு சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தும் அரியபெருமானுார்

/

மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக பொறுப்பும் கற்பிப்பு சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தும் அரியபெருமானுார்

மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக பொறுப்பும் கற்பிப்பு சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தும் அரியபெருமானுார்

மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக பொறுப்பும் கற்பிப்பு சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தும் அரியபெருமானுார்


ADDED : செப் 28, 2025 03:47 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்கங்களை கற்பிப்பவர். ஒரு சிறந்த ஆசிரியர் மனப்பாடத்தைவிட மாணவர்களின் தன்னம்பிக்கை, அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலையும் மேம்படுத்த வேண்டும். தற்போதைய டிஜிட்டல் உலகில், வகுப்பறைக்கு அப்பாலும் மாணவர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறந்த ஆசிரியர் மாணவர்களுக்கு சமூக பொறுப்பை ஏற்படுத்துவதுடன் தாங்களும் சமூக பொறுப்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் அரியபெருமானுார் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரியும் செலின்மேரி மாணவர்களுக்கு பாடதிட்டங்களை மட்டும் போதிக்காமல் தனித் திறன், கலை, இலக்கியம், பிறமொழி அறிவையும் மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆசிரியை செலின்மேரி கடந்த 1999ம் ஆண்டு எரவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2003ம் ஆண்டு அரியபெருமானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் பெற்றார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பள்ளியில் பணிபுரிவதால், அப்பகுதி மக்களுக்கும் செலின்மேரி மிகவும் பரிட்சையமாக உள்ளார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலனுக்காக கல்வி தொலைக்காட்சி பார்க்க வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு நேரில் சென்று பாடங்களை நடத்தினார். மாணவர்களின் குடும்பங்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் உட்பட பல்வேறு உதவிகளை செய்தார். துாய்மை பணியாளர்களுக்கும் தன் சொந்த செலவில் உதவிகள் செய்ததுடன், தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

பள்ளியில் பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இடைநிற்றலின் காரணம் குறித்து அறிந்து அதனை சரிசெய்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார்.

மாணவர்களின் கல்வி அறிவுடன் பிற திறன்களை மேம்படுத்துவதற்காக ஸ்போக்கன் இங்கிலீஷ், செஸ், எண்ணும் எழுத்தும், கற்றல் விளைவுகள், புத்துணர்ச்சி, சுகாதார பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும், கற்றல் கற்பித்தல் மூலம் ஊக்கமளித்து மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதில் ஆசிரியை செலின்மேரி கைதேர்ந்தவர்.

இதனால் மாணவர்கள் இவரது வகுப்பறையில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வமுடனும் பாடம் கற்கின்றனர். தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் மாணவர்களுக்கு கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் லேப்டாப், டேப்லட், ஆண்டராய்டு போன், ஸ்பீக்கர், டேப்ரிக்கார்டர், மைக் உள்ளிட்டவைகளை மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வட்டார அளவில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் குழுவிலும் கருத்தாளராக உள்ளார்.

தனித்திறமையை மேம்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரை, நாடகம், நடனம், விளையாட்டுப் போட்டி போன்றவைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி அதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

சங்கராபுரம் தமிழ்சங்கம் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் இவர் பயிற்சி அளித்த 'நீதியை நிலை நாட்டிய சிலம்பு' என்ற நாடகத்தில் நடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் செலின்மேரி ஆண்டுதோறும் பள்ளி நுாலகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களையும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், கழிவறை சுத்தம் செய்யும் பொருட்கள் தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

முன்னாள் மாணவர்கள் உதவியுடன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எல்.இ.டி., 'டிவி' மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்கள் அமர டேபிள், சேர் ஆகியவற்றையும் பள்ளிக்கு வழங்கியுள்ளார். மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த மாணவர் பதிப்புகளான ஊஞ்சல் இதழ், 'தினமலர் சிறுவர் மலர்', 'தினமலர் பட்டம்' இதழ்களை வாங்கி மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.

வாய்ப்பாடு சொல்லுதல், காகிதம் மற்றும் பணை ஓலை பயன்படுத்தி சிறு பொருட்கள் செய்யும் கைத்திறன் பயிற்சி அளிக்கிறார். ஆசிரியர் செலின்மேரி செயல்களை பாராட்டி வட்டார வள மையம் சார்பில் கடந்த 2006ம் ஆண்டில் இவருக்கு சிகரம் தொட்ட ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

மேலும் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் கலாம் விருது, தமிழ்துாண், சிங்கப்பெண், கல்வி செங்கோல், சேவை ரத்னா, கல்வி அச்சாணி போன்ற 10க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார். மேலும் புதுச்சேரி ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் ஆசிரியர் செலின்மேரிக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளனர். ஆசிரியை செலின்மேரியின் அனைத்து சமூக பணிகளுக்கும் அவரது கணவர், பரங்கிநத்தம், பழங்குடியினர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வமணி பக்க பலமாக இருந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us