/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறார்கள் பைக் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு : அலட்சிய பெற்றோர் மீது நடவடிக்கை தேவை
/
சிறார்கள் பைக் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு : அலட்சிய பெற்றோர் மீது நடவடிக்கை தேவை
சிறார்கள் பைக் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு : அலட்சிய பெற்றோர் மீது நடவடிக்கை தேவை
சிறார்கள் பைக் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பு : அலட்சிய பெற்றோர் மீது நடவடிக்கை தேவை
ADDED : ஜன 17, 2025 11:23 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைத்திட, பைக் ஓட்டி செல்லும் சிறார்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிவேகமாக செல்லும் இன்ஜின் திறன் கொண்ட பைக்குகள் விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் சமூக வலைதளங்களில் மூழ்கி திளைக்கும் சிறார்கள், தாங்கள் விரும்பும் பைக்கினை வாங்கி தரக்கோரி அடம் பிடிக்கின்றனர். பெற்றோர்களும் வேறுவழியின்றி ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தொகை கொடுத்து பைக் வாங்கி தருகின்றனர். அவ்வாறு பைக் வாங்கும் பலர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதில்லை.
வாகனத்திற்கான பதிவெண் கிடைத்ததும், பைக் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு மாற்றங்களை செய்கின்றனர். அதாவது, பைக்கில் உள்ள இரண்டு கண்ணாடிகளை அகற்றுதல், போலீசாரிடம் இருந்து தப்பிக்க மடக்கி எடுக்கும் வகையிலான நம்பர் பிளேட் பொருத்துதல், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர், கண் கூசும் வகையிலான கூடுதல் லைட் ஆகியவற்றை பொருத்துகின்றனர்.
தொடர்ந்து, இளைஞர்கள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லுாரிக்கு பைக்கில் செல்கின்றனர். அங்கு, மற்ற மாணவர்கள் முன்னிலையில் 'வீலிங்' செய்தல், அதிவேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விபத்து ஏற்படும் போது, பைக்கில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மட்டுமின்றி, அவ்வழியாக வாகனங்களில் செல்லும் மற்ற நபர்களும் பாதிப்படைகின்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு காயம் மட்டும் ஏற்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் சமரசமாகி கொள்வதால் போலீசார் வழக்கு பதிவதில்லை. ஆனால், உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் கட்டாயம் வழக்கு பதியப்படுகிறது.
புதிய மோட்டார் வாகன விதிமுறைப்படி, 18 வயதுக்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். பைக் ஆர்.சி., ரத்து செய்வதுடன், சம்மந்தப்பட்ட நபர் 25 வயது பூர்த்தியடையும் வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. இன்ஸ்யூரன்ஸ் தொகையும் கிடைக்காது. இந்த விதியை பின்பற்றி, தென்காசி மாவட்டத்தில் பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் இந்த விதிமுறைகளை பின்பற்றி வழக்கு பதிவதில் கவனம் செலுத்துவதில்லை. வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாரும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி., புக் பரிசோதிப்பது, ெஹல்மெட் அணியாதது, இன்ஸ்யூரன்ஸ் இல்லாதது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றை மட்டுமே பரிசோதித்து அபராதம் விதிக்கின்றனர்.
எனவே, சிறார்கள் மற்றும் ஓட்டுநர் உரிமமின்றி பைக் ஓட்டி செல்லும் மாணவர்களை முறையாக கண்காணித்து, வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தனி கவனம் செலுத்த வேண்டும். போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.