அரசு கல்லுாரியில் சேர 38,112 விண்ணப்பங்கள்... குவிந்தன!கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 12,964 அதிகரிப்பு
அரசு கல்லுாரியில் சேர 38,112 விண்ணப்பங்கள்... குவிந்தன!கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 12,964 அதிகரிப்பு
UPDATED : ஜூன் 04, 2026 04:01 PM
ADDED : ஜூன் 04, 2026 04:00 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை வகுப்புகளில் சேர்ந்து பயில ஆன்லைன் மூலம் 38 ஆயிரத்து 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளில் 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது.
கல்லுாரியில் இளநிலை வகுப்புகளில் சேர கடந்த மே 9 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் ஜூன் 3ம் தேதியுடன் நிறைவடைந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் (அடைப்புக்குறிக்குள் துறை வாரியாக புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை) பி.ஏ., தமிழ் (70), ஆங்கிலம் (70), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியல் (50), கணிதம் (70), வேதியியல் (50), இயற்பியல் (50) என 7 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தமாக 430 மாணவ, மாணவியரை சேர்க்கலாம்.
இதில், தமிழ்ப்பாடப்பிரிவில் 2,746, ஆங்கிலம் 1,505, பி.காம்., 1,316, பி.எஸ்சி., கணினிஅறிவியல் 1,973, கணிதம் 652, வேதியியல் 1,759, இயற்பியல் 910 என மொத்தமாக 10 ஆயிரத்து 861 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் (70), பொருளாதாரம் இரண்டு ஷிப்டுகள் (140), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியில் (50), புள்ளியியல் (50) ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில், 380 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். இதில், தமிழ்ப் பாடப் பிரிவில் சேர 2,407 விண்ணப்பங்கள், பி.ஏ., பொருளாதாரம் 2,144, பி.எஸ்சி., கணினி அறிவியல் 1,644, புள்ளியியல் 318, பி.காம்., 1,097 என மொத்தமாக 7,610 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் உள்ள பி.ஏ., தமிழ் (70), ஆங்கிலம் (70), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியல் (50), வேதியியல் (50) ஆகிய 5 பாடப்பிரிவுகளில் 310 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். இதில், தமிழ் பாடப்பிரிவில் 2,844, ஆங்கிலம் 1,706, பி.காம்., 1,308 பி.எஸ்சி., கணினி அறிவியல் 2,048, வேதியியல் 1,912 என மொத்தமாக 9,818 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை கல்லுாரியில் பி.ஏ., தமிழ் (60), ஆங்கிலம் (60), பி.காம்., (60), பி.பி.ஏ., (60), பி.எஸ்சி., கணினி அறிவியில் (50) ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில், 290 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். இதில், தமிழ் 2,897, ஆங்கிலம் 1,761, பி.காம்., 1,348, பி.பி.ஏ., 1,840, கணினி அறிவியல் 1,974 என மொத்தமாக 9,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இளங்கலை முதலாமாண்டில் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 1,410 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். இதற்கு மொத்தமாக 38 ஆயிரத்து 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி, இ-மெயில் மற்றும் போன் அழைப்பு மூலமாக கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு கல்லுாரிகளிலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று 5ம் தேதி தொடங்குகிறது. கடந்த கல்வியாண்டில் 25 ஆயிரத்து 148 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 12 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பிறகு, தமிழக அரசு அனுமதித்தால் ஒரு பாடத்துறையில் 20 சதவீதம் கூடுதல் சேர்க்கை நடைபெறும்.
