/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை! வனப்பகுதியில் நிரந்தர காடுகள் அமைக்க கோரிக்கை
/
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை! வனப்பகுதியில் நிரந்தர காடுகள் அமைக்க கோரிக்கை
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை! வனப்பகுதியில் நிரந்தர காடுகள் அமைக்க கோரிக்கை
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை! வனப்பகுதியில் நிரந்தர காடுகள் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 05, 2024 06:51 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் வனவிலங்குகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், வனப்பகுதியில் நிரந்தர காடுகள் அமைத்து, உணவு, இருப்பிட வசதியை ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான வனப்பகுதி உள்ளது.
இங்கு மயில், மான், முயல், குரங்கு, காட்டுபன்றி, பாம்பு, கீரி, உடும்பு உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காப்புக்காடு அழிக்கப்பட்டு, வியாபார நோக்கத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது.
இதற்காக வனப்பகுதியில் இருந்த இயற்கையான புதர்களும், உணவு தரும் வகையில் இருந்த பழமரங்களும் அழிக்கப்பட்டு, நிலத்தை உழுது யூகலிப்ட்ஸ் மரக்கன்று நடப்படுகிறது. யூகலிப்ட்ஸ் மரங்கள் நன்கு வளர்ந்ததும் அதை அறுவடை செய்து பேப்பர் தயாரிப்பு ஆலைக்கு அனுப்புவதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.
இருப்பிடமும், உணவும் இல்லாததால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்கள், விளைநிலங்களில் அலைந்து திரிகின்றன.
அவ்வாறு செல்லும் விலங்குகள் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் மோதியும், விளைநில கிணற்றில் தவறி விழுந்தும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர் கதையாகவே உள்ளது. இதுதவிர, பாதுகாப்பற்ற முறையில் வெளிப்பகுதியில் சுற்றித்திரியும் மான், முயல், காட்டுபன்றி, மயில் ஆகியவற்றை சமூக விரோதிகள் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக, விளைநில பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஆண்டுதோறும் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளும் முறையான பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
இதுபோன்று வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை.
இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில் வனவிலங்குகளே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
யூகலிப்ட்ஸ் மரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு செலவு செய்தாலே வனவிலங்குகள் பத்திரமாக இருக்கும். அல்லது மொத்த வனப்பகுதியில் 15 சதவீத இடத்தை ஒதுக்கி மனித நடமாட்டமில்லாத நிரந்தர காடாக மாற்றுவதன் மூலம் வனவிலங்குகளை பாதுகாக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கின்றனர்.