/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குளோரின் கலந்த தண்ணீர் வழங்க நடவடிக்கை தேவை
/
குளோரின் கலந்த தண்ணீர் வழங்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 27, 2024 11:23 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குளோரின் கலந்த தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுகிணறு வெட்டப்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து பைப்லைன் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பைப் மற்றும் மினி டேங்க் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், ஒரு சில கிராமங்களில் ஏரி, குளம் நிரம்பியுள்ளது. இதனால் பொது கிணற்றில் உள்ள தண்ணீரின் நிறமும் மாறியுள்ளது.
நிறம் மாறிய கலங்கலான தண்ணீரை குடிக்கும் பெரும்பாலானோருக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய் பரவி வருகிறது.
தண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகள் நீரின் மூலம் பரவும் நோய்களை உண்டாக்குகின்றன. எனவே, பொது கிணறுகளில் தண்ணீரின் கொள்ளளவுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் குளோரினை கலக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதால் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதுடன், நோய் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
மேலும், தண்ணீரை வடிகட்டி, காய்ச்சி பருகவும், வீடுகளில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்றுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.