/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா? உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 05, 2024 04:21 AM

உளுந்துார்பேட்டை : விவசாய பொருட்கள் அறுவடை அதிகரித்துள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை, தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள் விவசாய விளை நிலங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகளில் அதிக அளவில் நெல், கரும்பு, உளுந்து, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதோடு, இரவு, பகல் பாராமல் பயிரிட்டு விவசாயிகள் அறுவடை செய்து விற்பனையின்போது பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
விவசாய பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் கடனாளிகள் ஆகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தனை இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது விவசாய பொருட்களின் அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
இதனால் மார்க்கெட் கமிட்டிகளில் விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளன. மார்க்கெட் கமிட்டியில் பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளதால் ஓரிரு நாட்கள் மார்க்கெட் கமிட்டி மூடப்பட்டு விவசாய பொருட்கள் எடை போடுவது நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால், விளைபொருட்களைக் கொண்டு வரும் வாகனங்கள் மார்க்கெட் கமிட்டிக்குள் செல்ல முடியாமல் சாலையில் நீண்ட துாரத்திற்கு நின்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தில் விவசாய பொருட்கள் குவிவதால் பல மணி நேரம் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விலை குறைவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால், அந்தந்த பகுதியில் விவசாயிகள் விளை பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்து பயனடைவர். எனவே, மாவட்டத்தில் மேலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

