/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியால்... அதகளம்; கள்ளக்குறிச்சியில் முந்தப்போவது யார்?
/
அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியால்... அதகளம்; கள்ளக்குறிச்சியில் முந்தப்போவது யார்?
அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியால்... அதகளம்; கள்ளக்குறிச்சியில் முந்தப்போவது யார்?
அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியால்... அதகளம்; கள்ளக்குறிச்சியில் முந்தப்போவது யார்?
ADDED : ஏப் 16, 2024 06:57 AM
திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., வேட்பாளர்கள் அமைதியாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 13 சுயேச்சைகள் உட்பட 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் தி.மு.க., - அ.தி.மு.க., வுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக பா.ஜ., தலைமையில் உருவான பா.ம.க., வும் களம் காண்கிறது.
அடுத்து இளைஞர்கள் மத்தியில் எழுச்சி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி இடம் பெறுகிறது. இதில் குறிப்பாக திராவிட கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர் என்பதால் மலையரசனுக்காக வசந்தம் கார்த்திகேயனே நேரடியாக களமிறங்கி தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளராக இருக்கும் குமரகுரு போட்டியிடுகிறார். அக்கட்சியினருக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். அத்துடன் அ.தி.மு.க., வின் பொதுச் செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நண்பர். இதன் காரணமாக ஆளும் தி.மு.க., விற்கு இணையாக அ.தி.மு.க., வினரும் பணத்தை வாரி இரைத்து செலவழித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிக்கும் இடையே பலமான நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாவது அணியாக பேசப்படும் பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., சார்பில் தேவதாஸ் போட்டியிடுகிறார். பா.ம.க., சார்பில் இவர் போட்டியிட்டாலும், தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் வரிசையில் இவரும் பார்க்கவகுல உடையார் சமூகத்தைச் சேர்ந்தவரே. இதன் காரணத்தினாலோ என்னவோ பா.ம.க.,வின் பிரசாரம் பா.ஜ., வின் அரவணைப்பு கள்ளக்குறிச்சியில் அவ்வளவாக இல்லை என்றே கூற வேண்டும். இது அ.தி.மு.க., வுக்கு சாதகமாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மூன்று கட்சிகளும் ஒரே சமூகத்தினரை வேட்பாளராக ஆக்கி இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி துளுவவெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீச பாண்டியனை களம் இறக்கி உள்ளது.
இது கட்சிக்கு சற்று பலத்தைக் கொடுத்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டணி சிக்கல் போன்ற எந்த பிரச்னையும் இல்லாமல் எளிமையான முறையில் அனைத்து பகுதியிலும் பிரசாரத்தை முடித்துள்ளனர்.
என்றாலும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு இவருக்கான ஓட்டை எந்த அளவிற்கு பெற்றுத் தரும் என்பது தெரியவில்லை.
களத்தில் 21 பேர் இருந்தாலும், நான்கு பேர் மட்டுமே மக்கள் பார்வைக்கு வருகின்றனர். இதில் தற்போது வரை தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.

