/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை பாதிப்பில் இருந்து நெல், உளுந்து பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகள் பின்பற்ற வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
/
மழை பாதிப்பில் இருந்து நெல், உளுந்து பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகள் பின்பற்ற வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
மழை பாதிப்பில் இருந்து நெல், உளுந்து பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகள் பின்பற்ற வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
மழை பாதிப்பில் இருந்து நெல், உளுந்து பயிர்களை காக்க... ஆலோசனை; விவசாயிகள் பின்பற்ற வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : டிச 11, 2024 06:23 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் இருந்து சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவு சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயல் மழையாலும், வட கிழக்கு பருவமழையாலும் இப்பயிர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.
இப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
வயலில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் காற்றோட்டமின்றி நெல் வேர்களின் சுவாசம் பாதிக்கப்படும். வேர்களை சுற்றியுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறையும்.
எனவே வயலில் தேங்கும் கூடுதல் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். மழைநீர் வடியும் போது, அதனுடன் மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகளவு வெளியேறும். இதனால், பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
இளம் மற்றும் சற்று வயதான நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வெள்ளத்தால் கரைந்து போன வயலில் அதே வயதுடைய நெற்பயிரை நட்டு பயிரின் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
நீர் வடிந்ததும் பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.
பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டிருப்பின், இலை வழியாக ஏக்கருக்கு 2 கிலோ யூரியா வுடன், 1 கிலோ ஜிங்க் சல் பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை தெளிக்க வேண்டும். அல்லது 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்., தண்ணீரில் கலந்து, ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடிக்க வேண்டும்.
அப்போது கிடைக்கும் தெளிந்த நீருடன், 2 கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து, 190 லிட்., தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் நுண்ணுாட்ட உர கலவையை, ஏக்கருக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும்.
வயலில் தேங்கிய நீரினை வடிந்த பின், பூஞ்சான நோய் தாக்குதலால் பயிர் அழுகல் தென்பட்டால் ஏக்கருக்கு 200 மி.லி., புரப்பிகோனசோல் மருந்தினை தெளிக்க வேண்டும்.
அதேபோல், உளுந்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வேண்டும். உடன் சாலிசிலிக் அமிலம் 100 பி.பி.எம்.,யை ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இதனையடுத்து 2 சதவீத டி.ஏ.பி., கரைசலை காலை அல்லது மாலை வேளையில் பயிரில் தெளிக்க வேண்டும்.
பயிரின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பட்சத்தில், 15 நாட்கள் கழித்து மீண்டும் 2 சத வீத டி.ஏ.பி., கரைசலை தெளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தி மகசூல் இழப்பில் இருந்து பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்.