/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : பிப் 01, 2024 06:34 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்எஸ்.பி., அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
நகரின் முக்கிய சாலையான சங்கராபுரம், கச்சிராயபாளையம் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள துருகம் மற்றும் சேலை சாலை இதுவரை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. நகரில் காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகளுக்கு வருவோர், இரு சக்கர வாகனங்களை சாலையை அடைத்தவாறு தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் மாவட்ட அரசு துறை அதிகாரிகள் வாகனங்களும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்தம் பொருட்டு சாலையோரம் கயிறுகள் அமைக்கப்பட்டது.
கயிற்றுக்கு இடைப்பட்ட துாரத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீசாரின் தொடர் கண்காணிப்பு இல்லாதாதல் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியுள்ளது. ஒவ்வொரு முறையும் தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. நிரந்தர தீர்வுக்கு காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
குறிப்பாக சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் தற்போது போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகரில் ஆங்காங்கே அபராதம் வசூல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
எனவே, நகரின் அனைத்து முக்கிய சாலையிலும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு நிரந்தர தீர்வு மேற்கொள்ள எஸ்.பி., சமய்சிங் மீனா அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் விருப்பமாக உள்ளது.