/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அவலம்! கழிவு நீர் தேக்கமான நீர் நிலைகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
அவலம்! கழிவு நீர் தேக்கமான நீர் நிலைகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அவலம்! கழிவு நீர் தேக்கமான நீர் நிலைகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அவலம்! கழிவு நீர் தேக்கமான நீர் நிலைகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 18, 2024 09:59 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகள் கழிவு நீர் தேக்கமாக மாறி வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாவட்ட தலை நகரமாக உள்ளதால் நகர பகுதிகள் விரிவாக்கம் அடைவதுடன் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நகரில் உருவாகும் கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி உள்ளது. இதனால், மழை காலங்களில் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடும் அவலம் ஏற்படுகிறது. மேலும் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் ஆங்காங்கே கழிவு நீர் தேங்குகிறது.
கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தியாகதுருகம் சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக சென்று கோமுகி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் கழிவு நீர் ஆறு போல ஓடுகிறது. அதேபோல் வ.உ.சி., நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சித்தேரியில் சென்று தேங்குகிறது.
மழை காலங்களில் கோமுகி அணை நிரம்பும்போது, ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு சில கிராமங்களில், ஆற்றில் போர்வெல் அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் ஆற்றின் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் பலர் துணிகள் துவைப்பது, குளிப்பது போன்ற பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். கழிவு நீருடன், ஆற்று தண்ணீர் கலக்கும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஆறு, ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே நீர் நிலைகள் கழிவு நீர் தேக்கமாக மாறி வருவதை தடுக்கும் பொருட்டு, சுத்தகரிப்பு செய்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.