/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக... குற்றச்சாட்டு
/
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக... குற்றச்சாட்டு
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக... குற்றச்சாட்டு
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக... குற்றச்சாட்டு
UPDATED : ஆக 30, 2025 06:29 AM
ADDED : ஆக 29, 2025 11:56 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து பேசினர். கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாஸ், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், கால்நடை இணை இயக்குநர் விஷ்ணுகாந்தன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
க.அலம்பலத்தில் உள்ள 50 ஏக்கருக்கும் அதிகமான பஞ்சமி தரிசு நிலத்தை அனுபவத்தின் பேரில் பட்டா வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் மழையின் போது கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. விளை நிலங்களில் நடப்படும் மக்காச்சோளங்களில் கதிர் சரியாக வருவதில்லை. எனவே, மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பல்வேறு நிறுவன மக்காச்சோள விதைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
வேளாண் பொறியியல் துறை மூலமாக துார்ந்து போன கிணறுகள் துார்வாருவதை அதிகப்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசன உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. செம்பியன்மாதேவியில் இருந்து கூத்தக்குடிக்கு செல்லும் 16 கி.மீ., சாலை மோசமாக இருப்பதால் 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிரமமடைகின்றனர். தியாகதுருகத்தில் தஞ்சாவூரான் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இங்குள்ள கடையில் மது வாங்குபவர்கள் புறவழிச்சாலையினை ஒட்டியவாறு உள்ள பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மாவட்டத்தில் யூரியா எம்.ஆர்.பி., தொகையை விட அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். தோட்டக்கலை துறை மூலமாக மிளகாய், கத்தரி நாற்று அதிகளவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
உளுந்துார்பேட்டை அருகே பிடாகத்தில் சாலையோரமாக குப்பைகள் எரிந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியில் மரக்கன்று நட வேண்டும். குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் 3 கரும்பு ஆலைகள் உள்ள நிலையில் வெளிப்பகுதியை சேர்ந்த ஆலைக்கு கரும்பு கொண்டு செல்லப்படுகிறது. இதைத்தடுக்க மாவட்ட எல்லைகளில் 'செக்போஸ்ட்' அமைத்து கண்காணிக்க வேண்டும். வெவ்வேறு மாவட்ட கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பத்திரவு பதிவு அலுவலகங்களை மறு வரையறை செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு பேப்பர் ஆலை நிறுவனம் வெளிநாட்டில் இருந்து காகிதக்கூழ் இறக்குமதி செய்வதால், மாவட்டத்தில் விளைவிக்கப்படும் சவுக்குகள் விற்பனை குறைந்துள்ளது.
கல்வராயன்மலையில் அனுபவ நிலங்களின் பரப்பளவு குறைத்து விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது. மரவள்ளி பயிர் விலை கனிசமாக குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெல், எள் மற்றும் வாழை பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். ஏரிகளில் வண்டல் எடுக்கும் போது அதிக ஆழம் தோண்டுதல், வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தல் போன்ற பல்வேறு முறைகேடுகள் உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும். வனவிலங்குகள் விவசாயிகளையும், கால்நடைகளையும் தொடர்ச்சியாக தாக்குவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

