/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகராட்சியாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்... அவலம்; அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத கள்ளக்குறிச்சி
/
நகராட்சியாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்... அவலம்; அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத கள்ளக்குறிச்சி
நகராட்சியாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்... அவலம்; அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத கள்ளக்குறிச்சி
நகராட்சியாகி 24 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்... அவலம்; அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத கள்ளக்குறிச்சி
ADDED : மே 28, 2024 05:13 AM
கள்ளக்குறிச்சி : மாவட்ட தலைநகராக உருவெடுத்து அசுர வளர்ச்சி கண்டுவரும் கள்ளக்குறிச்சி நகராட்சி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் நீடித்து வருவது இப்பகுதி மக்களை வெகுவாக பாதிப்படைய செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி கடந்த 1960ம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியானது. கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியானது. பின், 2010ம் ஆண்டில் முதல் நிலை நகராட்சியானது.
நகராட்சியாக மாறி கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை, வடிகால், குடிநீர், மின் விளக்குகள் போன்ற முக்கிய தேவைகள் எதுவும் முறையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. நகராட்சியில் 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்குள்ள முக்கிய சாலைகளான சேலம், தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகிய சாலைகளை மையப்படுத்தியே நகரம் வளர்ச்சி கண்டு வருகிறது.
கோமுகி ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட வந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பசுமை தீர்ப்பாயம் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை மறுசுழற்சி செய்திட பல கோடி நிதியில் திட்டங்கள் பல செய்யப்பட்டு வந்தாலும், அதனை முறையாக பயன்படுத்தாமல் அதிகாரிகளின் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் சாலையோரங்கள், தெருவோரங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் பரவி பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பில்லாததால் தற்போது ஆங்காங்கே துார்ந்து பயனற்றுப்போய் உள்ளது.
அதேபோன்று இங்குள்ள நான்கு சாலைகளும் முழுமையாக விரிவாக்கம் செய்யப்படாமல் பழங்கால அளவீட்டிலேயே இருப்பதுடன், அனைத்து சாலைகளையும் அடைத்துக்கொண்டு வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்புடன் தொடர்ந்து வருகிறது.
சாலையோரம் இருந்த ஒரு பகுதி கழிவுநீர் கால்வாய் முழுமையாக காணாமல் போய் உள்ளது. அத்துடன் தெருவோர கழிவுநீர் கால்வாய்கள் எதுவும் பிரதான கால்வாயுடன் இணைக்கப்படாமலும், ஆங்காங்கே அடைபட்டு துார்ந்து போய் காணப்படுகின்றன.
இதனால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுவதும், குடியிருப்புகளை சூழ்ந்து இருப்பதும் கள்ளக்குறிச்சி நகராட்சியின் சாபக்கேடாக இருந்து வருகிறது.
மேலும் ஏரியின் வரத்து வாய்க்கால்கள் பலவும் மூடப்பட்டு பிளாட்களாக மாற்றம் பெற்றுள்ளன. நகரமைப்பு அதிகாரிகளின் மெத்தனத்தால், தெருக்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் எதுவும் முறையான அளவீடுகளில் கட்டப்படவில்லை.
இதனால் பெரும்பாலான வீடுகளும் வெளியே பொதுவழியை ஆக்கிரமித்தவாறே அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற முக்கிய வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படாமல் இருப்பது கள்ளக்குறிச்சி நகர வளர்ச்சிக்கு மிகுந்த தடையாக இருக்கிறது.
மாவட்ட தலைநகராக உருவெடுத்து 5 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில், நகராட்சி அந்தஸ்தை எட்டி 24 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் கள்ளக்குறிச்சியில் சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்றே இப்போது வரை நீடித்து வருவது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே நகரப்பகுதியை 7 கி.மீ., சுற்றளவிற்கு மேலும் விரிவுபடுத்தி நகரின் முக்கிய அடிப்படை வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.