/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டீசல் கேனுடன் வந்த வயதான தம்பதி
/
டீசல் கேனுடன் வந்த வயதான தம்பதி
ADDED : ஆக 18, 2025 11:32 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு, டீசல் கேனுடன் வந்த வயதான தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அலுவலக நுழைவு வாயிலில் பையுடன் மனு அளிக்க வந்த வயதான தம்பதியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பையில் ஒரு லிட்டர் டீசல் கேன் இருந்தது தெரிந்தது. போலீசார் டீசல் கேன் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு சேர்ந்தவர் ராமசாமி, 75; அவரது மனைவி சிவகொழுந்து, 65; இவர்களுக்கு முருகேசன், 50; சந்திரசேகரன், 45; மகன்களும், சுசிலா என்ற மகள் உள்ளனர். இதில் முருகேசன், சசிகலா இறந்து விட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரனுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் மாடி வீட்டை தானசெட்டில்மென்ட் எழுதி கொடுத்தனர்.
அதன்பின் சந்திரசேகரன் பெற்றோரை முறையாக கவனிக்காமல், பராமரிப்புக்கான உதவி செய்யாமல் இருந்தார். மேலும், தாய் தந்தையை அடிக்கடி அடித்து மிரட்டி வந்தார்.
இதனால் மகன் சந்திரசேகரனுக்கு எழுதி கொடுத்த தானசெட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் என தொடர்ந்து புகார் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் விரக்தியடைந்த ராமசாமி, மனைவி சிவககொழுந்து ஆகியோர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ய இருந்தது தெரியவந்தது. போலீசார் வயதான தம்பதியை கலெக்டர் பிரசாந்திடம் அழைத்து சென்றனர். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.