‘போக்சோ’ வழக்கில் பாதித்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்போரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
‘போக்சோ’ வழக்கில் பாதித்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்போரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : நவ 24, 2026 04:38 PM
ADDED : நவ 24, 2026 04:36 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிபோருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம்–2012ன் கீழ் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிட ஆதரவு நபர்களுக்கான 20 பணியிடங்கள் மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
ஆதரவு நபர் குழந்தையின் சிறந்த நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை கருத்தில் கொண்டு காவல், குழந்தைகள் நலக் குழுமம் (சி.டபிள்யூ.,) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (டி.சி.பி.யூ) மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் தொடர்புடைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
குறைந்தபட்ச 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள் நலன், சுகாதாரம் அல்லது கல்வி தொடர்பான துறைகளில் குறிப்பாக சமூகப்பணி, சட்டம், உளவியல், குழந்தை வளர்ச்சி அல்லது குழந்தைகள் நலனுன் தொடர்புடைய பிற பொருத்தமான துறைகளில் முதுகலை பட்டமும், இத்துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இதன் பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
தகுதியாகன ஆதரவு நபர்களுக்கு, அவர்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்பட்டு, அவ்வழக்குகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக மட்டும் ஒரு வழக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பூதியம், 4 தவணைகளாக 2,500 ரூபாய் வீதம் வழங்கப்படும். வழக்குகள் ஒதுக்கப்படாத காலத்திற்கு எவ்வித மதிப்பூதியமும் வழங்கப்படாது.
தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடும் தகுதியான அமைப்புகள், ஆதரவு நபர் பணிக்கான விண்ணப்பத்தை https://kallakurichi.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 28ம் தேதி மாலை 5:45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 602, 6வது தளம், கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
