/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணை நீர் கிடைப்பது கேள்விக்குறி: துார்ந்தது கடைமடை பாசன வாய்க்கால்
/
மணிமுக்தா அணை நீர் கிடைப்பது கேள்விக்குறி: துார்ந்தது கடைமடை பாசன வாய்க்கால்
மணிமுக்தா அணை நீர் கிடைப்பது கேள்விக்குறி: துார்ந்தது கடைமடை பாசன வாய்க்கால்
மணிமுக்தா அணை நீர் கிடைப்பது கேள்விக்குறி: துார்ந்தது கடைமடை பாசன வாய்க்கால்
ADDED : நவ 22, 2024 07:05 AM

கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா ஆகிய இரு ஆறுகள் இணையும் சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேரடியாக 5,500 ஏக்கர், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
இங்கிருந்து நீர் கொண்டு செல்வதற்கு 15 கி.மீ., துாரத்திற்கு பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பெரும் பகுதி செப்பனிடப்படாமல் கரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு வேலை மேற்கொள்வதில்லை.
இதன் காரணமாக வாய்க்காலில் முட்செடிகள, புற்கள் அடர்ந்து வளர்ந்து துாரந்துள்ளது. பல இடங்களில் அந்தந்த பகுதி விவசாயிகளே வாய்க்காலை சீரமைத்து தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
பொதுப்பணித் துறையினர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதோடு சரி, மற்றபடி கடைமடைக்கு தண்ணீர் செல்கிறதா என்பதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, கண்டுகொள்வதுமில்லை.
பல இடங்களில் வாய்க்கால் துார்ந்து கிடப்பதால் செல்லும் வழியிலேயே தண்ணீர் விரயமாகி பயனின்றி போகிறது.
குறிப்பாக நீலமங்கலம், நிறைமதி, வீரசோழபுரம், வீ.பாளையம், மாடூர் ஆகிய கிராமங்களில் ஆயக்கட்டு நிலங்களுக்கு அணை நீர் கிடைப்பதில்லை.
கடந்த மாதம் அணையின் ஷெட்டர் பழுதடைந்து தண்ணீர் முழுதும் வெளியேறிய நிலையில் அணை நிரம்புவது கேள்விக்குறியாகி உள்ளது. இனி கன மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கிடைத்த தண்ணீர் கடைமடை வரை கொண்டு செல்லும் வகையில் கால்வாயை செப்பனிட்டு சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.