
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் உடற்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி, சிறுவங்கூரில் இயங்கும் அரசு மருத்துவக்கல்லுாரியில் உடற்பயிற்சி ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து கல்லுாரியில் மாணவர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கிடையே கடந்த, 15 தினங்களாக, 41 வகை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மனநல பாதுகாப்பிற்கு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
நிறைவு நாளான நேற்று மருத்துவ கல்லூரி முதல்வர் பவானி தலைமையில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்திலிருந்து ரோடு மாமாந்துார் வரை மாணவர்கள், டாக்டர்கள்,
பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், உடற்பயிற்சியின் அவசியம் குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று மீண்டும் மருத்துவக்கல்லுாரியை வந்தடைந்தனர்.
அங்கு உடற்பயிற்சியின் நலன்கள், மன நல முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர் நடன நிகழ்ச்சி நடந்தது.
இதில், துணை முதல்வர் ஷமீம், உறைவிடமருத்துவ அதிகாரி பொற்செல்வி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் பழமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் கணேஷ்ராஜா, ஸ்ரீநாத், ஜெயசீலன், காமராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

