/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்... புனரமைக்கப்படுமா; ஏரிகள், அணைக்கட்டுகள்,வரத்து வாய்க்கால்கள்
/
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்... புனரமைக்கப்படுமா; ஏரிகள், அணைக்கட்டுகள்,வரத்து வாய்க்கால்கள்
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்... புனரமைக்கப்படுமா; ஏரிகள், அணைக்கட்டுகள்,வரத்து வாய்க்கால்கள்
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்... புனரமைக்கப்படுமா; ஏரிகள், அணைக்கட்டுகள்,வரத்து வாய்க்கால்கள்
ADDED : ஆக 07, 2024 06:30 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கோமுகி மற்றும் மணிமுக்தா நதி உப வடிநில பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைத்து தண்ணீர் தேக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு, மக்காசோளம், பருத்தி, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். சிலர் காய்கறி பயிர்களை விளைவிக்கின்றனர்.
விவசாயத்தின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி உயரம் கொண்ட கோமுகி அணையும், சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் கொண்ட மணிமுக்தா அணையும், ஏரிகளும் உள்ளது.
மழைக்காலங்களில் இரண்டு அணைகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்திற்காக திறந்து விடப்படுவது வழக்கம். இதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரிகளும், பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களும் பயன்பெறும்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில ஏரிகள் மண்துார்ந்தும், கரைகள் பலமிழந்தும் உள்ளது. மேலும், பெரும்பாலான ஏரிகளின் தண்ணீர் வரத்து வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுதவிர ஏரி மதகு, கோடி தண்ணீர் செல்லும் இடமும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனை சீர் செய்து, நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி, விவசாய தொழில் பாதிப்படைவதை தவிர்த்திடும் வகையில் ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகள் முழுவதையும் புனரமைக்க வேண்டும்.
அதன்படி, கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உட்கோட்டத்திற்குட்பட்டு கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள் மற்றும் 213 ஏரிகள் மற்றும் 72 அணைகட்டுகள் உள்ளன. இரு அணைகள் மற்றும் ஏரி பாசனத்தை நம்பி 45,000 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இவைகளில் பருவ மழையின் போது முழுமையாக தண்ணீர் நிரப்பும் வகையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிடவும், ஏரியின் நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும்பட்சத்தில் கோடை காலங்களில் விவசாய பணிகள் இடையூறின்றி நடந்திட வழி ஏற்படும்.
அத்துடன் நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதுடன், கோடை காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான வழிவகை ஏற்படும்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைக்கட்டுகள் ஆகிய நீர் நிலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.