/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெஞ்சல் நிவாரணத்தொகை: விவசாயிகள் வேதனை
/
பெஞ்சல் நிவாரணத்தொகை: விவசாயிகள் வேதனை
ADDED : மே 01, 2025 05:35 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 'பெஞ்சல்' புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை கிடைக்காததால், கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
பெஞ்சல் புயலால் கடந்த, 2024ம் ஆண்டு டிசம்பரில் கனமழை கொட்டி தீர்த்தது. ரிஷிவந்தியம் பகுதியில், 3 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
மழை நின்றதும், விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றினர். நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீரால் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயி பெயர், விளைநில பரப்பளவு, சேதமான பயிர் விபரம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, ஆன்லைன் மூலமாக அரசுக்கு பதிவேற்றம் செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நிவாரணதொகை செலுத்தப்பட்டது. ஆனால், ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை.
இது குறித்து விவசாயிள் கேட்டபோது, வங்கி எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., கோடு தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து, விவசாயிகள் தங்களது விவரங்களை மீண்டும் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.