/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் பைக் ரேசால் விபத்துகள்... அதிகரிப்பு
/
திருக்கோவிலுாரில் பைக் ரேசால் விபத்துகள்... அதிகரிப்பு
திருக்கோவிலுாரில் பைக் ரேசால் விபத்துகள்... அதிகரிப்பு
திருக்கோவிலுாரில் பைக் ரேசால் விபத்துகள்... அதிகரிப்பு
ADDED : ஜன 29, 2025 06:41 AM
திருக்கோவிலூர் வேகமாக வளர்ந்து வரும் நகரம். பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்கோவிலூரில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாது பைக் ரேஸ், சாலையில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் மிகப்பெரும் அபாய நிகழ்வாக அரங்கேறி வருகிறது.
இதுவரை திருவண்ணாமலை - ஆசனூர் பைபாஸ் சாலையில் நடத்தப்பட்டு வந்த பைக் ரேஸ், போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், படிப்படியாக அதிகரித்து திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே செல்லும் நிலைமை பொது மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது.
இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அட்டாக் வரவழைக்கும் வகையில் விலை உயர்ந்த பைக்குகளில் காதை செவிடாக்கும் சத்தத்துடன் இயக்கும் வாகனங்களை எந்த போலீசாராலும் தடுத்து நிறுத்தமுடிவதில்லை, அவர்கள் மீது வழக்கும் பதிவதில்லை.
இதன் காரணமாக திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிகழும் பைக் விபத்துகளில் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களாக உள்ளனர். அல்லது அதிக போதையில் வாகனம் ஓட்டுபவர்களாக இருக்கின்றனர்.
வாகனத் தணிக்கை என்ற பெயரில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் ஆங்காங்கே நின்று சோதனையிடுகின்றனர்.
ஆனால், இவர்கள் யாரும் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களையோ அல்லது விலை உயர்ந்த வாகனங்களில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துபவர்களை பிடிப்பதில்லை. மாறாக கிராமத்தில் இருந்து வரும் அப்பாவி மக்களை பிடித்து வழக்கு பதிவு செய்கின்றனர்.
உள்ளூர்வாசிகளை பிடித்து வழக்குப்பதிந்தால் ரெக்கமண்டேஷனுக்கு வந்து விடுகின்றனர் என சாக்குப் போக்குகளை கூறுகின்றனர்.
இதே போல் கஞ்சா விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக திருக்கோவிலூர் அருகில் இருக்கும் கிராமங்களில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாகி விட்டது. இதனை வாங்கி வந்து சிறுவர்களும், இளைஞர்களும் புகைத்து, அவர்களையும் பாழாக்கிக் கொண்டு, பெற்றோர்களையும் வீணாக்கி விட்டு, இந்த சமூகத்தையும் சீரழிக்கின்றனர்.
இதனை எல்லாம் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் கவன குறைவே திருக்கோவிலூரில் அதிகரித்திருக்கும் பைக் விபத்திற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் அடிப்படை காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு வழக்கு பதிவதில் காட்டும் அதே ஆர்வத்துடன் கிராமங்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனையை தடை செய்வது, கஞ்சாவை கட்டுப்படுத்துவது, அதிக ஒலி எழுப்பும் பைக் ரேஸ் வாகனங்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருக்கோவிலூர் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.