/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு; மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு; மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு; மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு; மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
ADDED : நவ 10, 2025 03:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வீடு மற்றும் கடைகளுக்கு முன் நிறுத்தப்படும் பைக்குகளையும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தப்படும் பைக்குகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 3 மணிக்குள் திருடும் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
குற்ற சம்பவங்களை கண்காணிக்க போலீஸ் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் பெரும்பாலும் செயல்பாட்டில் இல்லை.
சி.சி.டி.வி., உள்ள பகுதியில் பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்கள் தங்களது முகத்தை முழுமையாக மூடிக் கொண்டு செல்கின்றனர். இதனால் பைக் திருட்டில் ஈடுபடும் நபரின் முகம் உள்ளிட்ட அடையாளங்கள் சரியாக பதிவாகுவதில்லை.
பைக்கினை இழந்த நபர்கள், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பைக்கினை திருடி செல்லும் காட்சிகளை 'பென்டிரைவில்' பதிவிறக்கம் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கின்றனர்.
போலீசார் விசாரணை செய்து தேடுவதாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவதாகவும் கூறி பைக் உரிமையாளர்களை அனுப்பி விடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடும் பைக்களை, வெளிமாவட்டத்திற்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு சாராயம், மதுபானம், போதை பொருட்கள் கடத்தும் நபர்களிடம் விற்று விடுகின்றனர்.
சிலர் திருட்டு பைக்குளை வாங்கி உதிரி பாகங்களாக தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர். ஒரு சிலர் திருட்டு பைக்கிற்கு, போலியாக ஒரு ஆர்.சி. புத்தகம் தயார் செய்து, பதிவு எண்ணை மாற்றி பயன்படுத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால், பைக் திருட்டு வழக்கு விசாரணையை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பைக் திருடும் கும்பல் தானாக போலீசாரிடம் சிக்கினால் மட்டுமே, பைக்குகள் பறிமுதல் செய்கின்றனர். இதனால் பைக்குகளை இழந்தவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகரித்துள்ள பைக் திருட்டு சம்பவங்கள் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனவே, பைக் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிய மாவட்ட போலீஸ் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

