/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலுாரை இணைக்க முட்டுக்கட்டை
/
விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலுாரை இணைக்க முட்டுக்கட்டை
விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலுாரை இணைக்க முட்டுக்கட்டை
விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலுாரை இணைக்க முட்டுக்கட்டை
UPDATED : ஜன 23, 2024 01:17 PM
ADDED : ஜன 23, 2024 04:33 AM
லோக்சபா தேர்தல் செலவுகளை யார் கவனிப்பது? : வருவாய்த் துறைக்கு வந்து விட்டது கவலை
மாவட்ட மறுவரையறை கிடப்பில் போடப்பட்டதால் லோக்சபா தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதி செலவினத்தை யார் மேற்கொள்வது என்ற சிக்கல் வருவாய்த் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுார் தொகுதி முழுதையும் உள்ளடக்கி விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என அதிகாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அப்போதைய ஆட்சியாளர்கள் சுயநலத்திற்காக திருக்கோவிலுார் உட்பட 20 கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனும், எஞ்சிய 85 சதவீத பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வகையில் பிரித்தனர்.
இதன் காரணமாக தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளை விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தது. வாக்காளர் பட்டியல் சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளை விழுப்புரம் கலெக்டர் மேற்கொண்டு வருகிறார்.
திருக்கோவிலுார் உட்பட 20 கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், தேர்தல் செலவினங்களை இதற்கும் சேர்த்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதியின் தலைமையிடம் மட்டுமல்லாது தேர்தல் நடத்தும் அலுவலராக திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், செலவினங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கண்டாச்சிபுரம் தாசில்தார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் செலவுகளை கண்டாட்சிபுரம் தாசில்தார் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தட்டிக் கழித்ததாக அப்போதைய திருக்கோவிலூர் தாசில்தார் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள் புலம்பித் தீர்த்தனர்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தேர்தல் பணிகளை வருவாய்த் துறையினர் துவங்கிவிட்ட நிலையில், விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குள் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியும் இடம்பெறுகிறது.
இந்நிலையில், திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் செலவுகளை யார் மேற்கொள்வது என்ற விவாதம் தாசில்தார் மட்டத்தில் இப்போதே துவங்கி விட்டது.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் 15 சதவீதம் மட்டுமே இருக்கும் திருக்கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்த்து விடுமாறு வருவாய்த்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.அதன் அடிப்படையிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதில், திருக்கோவிலுார் உட்பட 20 கிராமங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கவும், திருக்கோவிலுாரை ஒட்டி இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதி மக்கள் பாதிக்காமல் இருக்க ஜி.அரியூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகாவை உருவாக்கவும் கருத்துரு தயாரிக்கப்பட்டது.
அந்த கருத்துரு உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அரசியல் உள்நோக்கம் காரணமாக கருத்துருவை நிறுத்தி வைத்து விட்டதாக தகவல் அறிந்த வருவாய் துறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.
நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி பார்க்க வேண்டிய அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக திருக்கோவிலுார், விழுப்புரத்துடன் இணைக்கும் நடவடிக்கைக்கு போட்டிருக்கும் முட்டுக்கட்டை திருக்கோவிலுார் தொகுதி மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இது வரும் லோக்சபா தேர்தலில் அதிகாரிகளுக்கும் நிர்வாக சிக்கல்களை அதிகப்படுத்தும் என்பதால் தேர்தல் ஆணையம் விரைந்து மாவட்ட மறுசீரமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

