ADDED : மே 05, 2025 11:51 PM

உளுந்துார்பேட்டை, ; எம்.குன்னத்துார் கிராமத்தில் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துார் கிராமத்தில், நேற்று சந்தேகப்படும்படி வாலிபர் சுற்றித் திரிந்தார். அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் திருநாவலுார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலகிருஷ்ணன், 25; என்பதும், கடந்த 3ம் தேதி எம்.குன்னத்துார் பகுதியில் ஏழுமலை மகன் அய்யனார், 21; வீட்டில் இருந்து 6000 ரூபாய் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை திருடியதும், மீண்டும் பொருட்களை திருட கிராமத்திற்கு வந்து நோட்டமிட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
