/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பது... தடுக்கப்படுமா?: சின்னசேலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பால் சுகாதார சீர்கேடு
/
ஏரி கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பது... தடுக்கப்படுமா?: சின்னசேலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பால் சுகாதார சீர்கேடு
ஏரி கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பது... தடுக்கப்படுமா?: சின்னசேலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பால் சுகாதார சீர்கேடு
ஏரி கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பது... தடுக்கப்படுமா?: சின்னசேலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 29, 2025 06:18 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் நகரப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரும் கால்வாய்கள் வழியாக நேரடியாக ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது.
சின்னசேலம் பேரூராட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்பேரூராட்சி பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 355 ஏக்கர் பரப்பு ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி, அருகில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலமாக அருகில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அத்துடன் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும், பேரூராட்சியின் குடிநீர் கிணறுகளின் நீர்மட்டமும் உயர்கிறது.
சின்னசேலம் பேரூராட்சி அம்சாகுளம், விஜயபுரம், காந்தி ரோடு, மூங்கில்பாடி ரோடு, மேட்டுத் தெரு, கடை வீதி உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கால்வாய் வழியாக சின்னசேலம் ஏரியில் நேரடியாக கலந்து வருகிறது.
இதனை தடுப்பதற்காக பேரூராட்சி சார்பில் பாண்டியங்குப்பம் சாலை, அம்சாகுளம் அருகே என இரு இடங்களில் 10 அடி ஆழ பள்ளம் நோண்டி கழிவுநீரை அதில் தேக்கி, வடிகட்டப்பட்டு ஏரியில் கலப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்ததால் அவைகளில் கழிவுகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் முழுவதும் நேரடியாக ஏரியில் கலந்து வருகிறது. அத்துடன் இப்பகுதி குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவு நீரும் நேரடியாக கழிநீர் கால்வாய் வழியாக சின்னசேலம் ஏரியில் நேரடியாக கலந்து விவசாய நிலங்கள் மாசடைந்து வருகிறது. சின்னசேலம் ஏரியில் கலக்கும் கழிவுநீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. இதனால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மட்டும் இன்றி குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், கழிவுநீர் கலந்து உபயோகப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
தெருக்களின் சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் பரவி தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அத்துடன் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளதால், நீர் மாசுபட்டு அப்பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. பருவ மழை காலங்களில் கழிவுநீரோடு, மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதால், பல்வேறு நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
எனவே, சின்னசேலம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக ஏரியில் கலப்பதை தடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து சுகாதாரத்தை மேம்படுத்தவும், விவசாய பணிகள் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

