/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்
/
குழந்தைகள் பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 02, 2025 06:25 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட அளவிலான குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கொரோனா தொற்றால் பாதித்த ஒற்றை பெற்றோர் மற்றும் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளை கண்காணித்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கண்காணிக்கும் குழுவின் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கிய பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆய்வு நடந்தது. பின்னர் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு, திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் பதிந்த வழக்குகள், அதன்மீதான நடவடிக்கை மற்றும் இளைஞர் நீதி சட்டம், குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிந்த வழக்குகள், நடவடிக்கை குறித்து, கலெக்டர் கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வரும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

