/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருட்களால் சிறுவர்கள் பாதிக்கும்... அவலம்; கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
/
போதை பொருட்களால் சிறுவர்கள் பாதிக்கும்... அவலம்; கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
போதை பொருட்களால் சிறுவர்கள் பாதிக்கும்... அவலம்; கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
போதை பொருட்களால் சிறுவர்கள் பாதிக்கும்... அவலம்; கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
ADDED : நவ 11, 2024 05:28 AM
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவரை வெளியே தெரியாமல் அதிகாரிகள் துணையோடு நடந்த கள்ளச்சாராயம் விற்பனை வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
கள்ளச்சாராயத்தின் உற்பத்தி மையமாக கல்வராயன்மலை இருப்பதும் இங்கு சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கும், உற்பத்தி செய்த சாராயத்தை கடத்திச் சென்று விற்பனை செய்வதற்கும் சில போலீசாரும் வனத்துறை ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கள்ளச்சாராயத்திற்கு 68 உயிர்களை பலி கொண்ட பிறகே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தனிக்கவனம் மேற்கொண்டது. ஆனாலும் இதுவரை அதனை செயல்படுத்தி கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கள்ளச்சாராய சாவு நிகழ்ந்த பிறகும் கூட கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராய ஊறலும் அதற்கு தேவையான வெல்லம் உள்ளிட்ட கச்சா பொருட்கள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது.
அதேபோல் ஹான்ஸ், போதை பாக்கு உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனையும் கொடிக்கட்டி பறக்கிறது. மாவட்டத்தில் தினமும் போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.
இதிலிருந்தே இவற்றை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவது தெளிவாக தெரிகிறது. பெட்டிக்கடைகளில் சாதாரணமாக இது போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும் இதனை விற்பனை செய்கின்றனர். புதிதாக யாராவது சென்று கேட்டால் கொடுப்பதில்லை.
இது போன்ற போதை வஸ்துக்கள் பெட்டிக்கடைக்கு எப்படி தொடர்ந்து கிடைக்கிறது என்றும் அதனை சப்ளை செய்பவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து தடுக்க முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இதற்காக பெரிய நெட்வொர்க்கை வைத்து போதை வஸ்துக்களின் சப்ளை தடையின்றி நடக்கிறது. இதன் காரணமாக பள்ளி சிறார்கள் கூட ஹான்ஸ் மற்றும் போதைபாக்கு பயன்படுத்துவதை காண முடிகிறது.
சில பள்ளிகளில் மாணவர்கள் போதை வஸ்துக்களை வைத்திருப்பதை கூட ஆசிரியர்கள் கண்டிக்க முடியாமல் நிற்கும் நிலை உள்ளது. இதற்கிடையே கஞ்சா விற்பனையும் எப்போதும் போல் வழக்கமாக கை மாறுகிறது.
போதை வஸ்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும், அவற்றை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் கூட சம்பிரதாய நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுவதால் விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பயமின்றி போய்விட்டது.
இதன் காரணமாக மாவட்டத்தில் போதை வஸ்துக்களின் விற்பனை தாராளமாக நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.