/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கம் பணி... மந்தம்: இட நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி
/
சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கம் பணி... மந்தம்: இட நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி
சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கம் பணி... மந்தம்: இட நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி
சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கம் பணி... மந்தம்: இட நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி
ADDED : செப் 18, 2025 03:52 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரூ.1.98 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னசேலத்தில் ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தாலுகா, பேரூராட்சி, பி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. சுற்று வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் சின்னசேலத்திற்கு வந்து செல்கின்றனர். சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறன.
சேலம் - சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள், சின்னசேலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. குறிப்பாக ரயில் நிலையம் இருப்பதால் அதிகளவு பயணிகள் வரும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில் சின்னசேலம் பஸ் நிலையம் மிக குறுகலாக இருப்பதால், பயணிகள் மட்டுமின்றி, பஸ் டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். இங்கு ஒரே நேரத்தில் 5 பஸ்கள் கூட நிற்க முடியாத நிலை இருப்பதால், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வெளியே சாலையோரம் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றனர்.
பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அமருவதிற்கு போதிய இடவசதியும் இல்லை. இதனால் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புதியதாக அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
கடந்த 2022ம் ஆண்டு பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், போலீஸ் நிலையம் எதிரே பயன்படாத நிலையில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பகுதி வணிக வளாக கடைகளை அகற்றி விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்தாண்டு டிச., மாதம் பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கியது. இதில் பஸ் நிலைய ஓடுதளம், பயணியர் நிழற்கூடம், தாய்மார் பாலுட்டும் அறை, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, இலவச கழிப்பறை மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
பஸ் நிலைய பணிக்கு அடிக்கல் நாட்டி பல மாதங்களாகியும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. தற்போது வணிக வளாக கடைகளுக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் மட்டுமே நடக்கிறது.
காலை, மாலை நேரங்கள், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பஸ் நிலையத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு வருவதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவ மாணவிகள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, பஸ் நிலைய விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.