அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்: பொதுமக்கள் போராட்டத்தால் பதற்றம்
அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்: பொதுமக்கள் போராட்டத்தால் பதற்றம்
UPDATED : செப் 19, 2026 09:21 PM
ADDED : செப் 19, 2026 07:54 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு பின் சமாதானம் ஆகினர்.
இந்நிலையில், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது பிளஸ் 2 மாணவரை வகுப்பறைக்குள் புகுந்து பிளஸ் 1 மாணவர்கள் 8 பேர் சேர்ந்து தாக்கினர்.
இதில் காயமடைந்த அந்த மாணவர் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையறிந்த பிளஸ் 2 மாணவருக்கு ஆதரவாக பொதுமக்கள் பள்ளியின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவரை தாக்கிய எட்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் உடன்படாததால் அங்கு பதற்றம் நிலவியது.
சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ஷஹ்னாஸ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறிப்பாக அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் தங்களிடம் பேச வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நகர மாட்டோம் என கூறினர்.
அதன் பின் பொதுமக்களிடம் நீங்கள் கூறும் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன் என்று கூறிய பின் பொதுமக்கள் 5:30 மணிக்கு கலைந்து சென்றனர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
